மகளிர் உரிமை தொகை பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும்
மகளிர் உரிமை தொகையானது பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் என்று அலுவலர்களுக்கான 2-ம் கட்ட பயிற்சி முகாமில் கலெக்டர் ஸ்ரீதர் கூறினார்.
நாகர்கோவில்:
மகளிர் உரிமை தொகையானது பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் என்று அலுவலர்களுக்கான 2-ம் கட்ட பயிற்சி முகாமில் கலெக்டர் ஸ்ரீதர் கூறினார்.
மகளிர் உரிமைத்தொகை
குமரி மாவட்ட வருவாய் துறை மற்றும் பள்ளி கல்வித்துறையின் சார்பில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பணியாற்ற உள்ள அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கான 2-ம் கட்ட பயிற்சி முகாம் நாகர்கோவிலில் உள்ள எஸ்.எல்.பி. அரசு தொடக்கப்பள்ளியில் நேற்று நடந்தது. பயிற்சியில் கலெக்டர் ஸ்ரீதர் பங்கேற்று பேசியபோது கூறியதாவது:-
கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தினை பெறுவதற்கு குடும்பத்தில் 21 வயது நிரம்பிய பெண், ரூ.2½ லட்சத்திற்கு கீழ் வருமானம் ஈட்டும் குடும்பங்கள், 5 ஏக்கருக்கு குறைவாக நன்செய் நிலம் அல்லது 10 ஏக்கருக்கு குறைவாக புன்செய் நிலம் வைத்துள்ள குடும்பங்கள், ஆண்டிற்கு வீட்டு உபயோகத்துக்கு 3,600 யூனிட்டிற்கும் குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்கள், குடும்ப அட்டையில் ஆண் குடும்பத் தலைவராக இருந்தால் அவரது மனைவி குடும்பத் தலைவியாக கருதப்பட்டு உரிமைத்தொகை வழங்கப்படும்.
தகுதி இல்லாதவர்கள்
மேலும், குடும்பத்தில் ஆண்டு வருமானம் ரூ.2½ லட்சத்துக்கு மேல் ஈட்டி வருமானவரி கணக்கு தாக்கல் செய்பவர்கள் மற்றும் வருமான வரி செலுத்துபவர்கள், அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் வங்கி ஊழியர்கள், ஏற்கனவே முதியோர் ஓய்வூதியம், விதவை ஓய்வூதியம், அமைப்புசாராத் தொழிலாளர் நலவாரிய ஓய்வூதியம் போன்ற சமூக பாதுகாப்பு திட்ட ஓய்வூதியம் மற்றும் அரசிடமிருந்து ஓய்வூதியம் பெறும் குடும்பங்கள் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தினை பெற தகுதி இல்லாதவர்களாக கருதப்படுவார்கள்.
தொய்வின்றி...
குமரி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டமானது மகளிர் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி அவர்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்தி சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு இத்திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்த அனைத்துத்துறை அலுவலர்களும் ஒத்துழைக்க வேண்டும். அனைத்து அலுவலர்களும் தினந்தோறும் ஒவ்வொரு நாளும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியின் முன்னேற்றம் குறித்து அறிக்கை சமா்ப்பிக்க வேண்டும். அனைத்து பணிகளையும் எவ்வித தொய்வின்றி முடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முகாமில் நாகர்கோவில் கோட்டாட்சியர் சேதுராமலிங்கம், முதன்மை கல்வி அலுவலர் முருகன், அகஸ்தீஸ்வரம் தாசில்தார் ராஜேஷ், உதவி திட்ட அலுவலர்கள் பிரபாகர், துரைராஜ், முதன்மை கருத்தாளர் ஷாமிலி, பயிற்சி ஒருங்கிணைப்பாளர் செந்தில் உள்பட பலர் கலந்துகொண்டனர்.