தேனி கலெக்டர் அலுவலகத்தில் பெண்கள் தர்ணா
மகளிர் உரிமைத்தொகை கிடைக்காததால் தேனி கலெக்டர் அலுவலகத்தில் பெண்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மகளிர் உரிமைத்தொகை
தமிழக அரசு மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கும் வகையில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை கடந்த மாதம் செயல்படுத்தியது. கடந்த மாதம் பயனாளிகளுக்கு உரிமைத்தொகை அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இந்த மாதத்துக்கான உரிமைத்தொகையும் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது.
இந்த திட்டத்தில் தகுதியான பயனாளிகள் விடுபடக்கூடாது என்பதற்காக விண்ணப்பங்களின் நிலையை அறிந்து மேல் முறையீடு செய்யலாம் என்றும், விண்ணப்பிக்காதவர்கள் புதிதாக விண்ணப்பிக்கலாம் என்றும் அரசு அறிவித்தது. அதன்படி பலர் மேல்முறையீடு செய்து வருகின்றனர். இந்நிலையில் மகளிர் உரிமைத்தொகை கிடைக்காத பெண்கள் பலர் தங்களுக்கு உரிமைத்தொகை கிடைக்காததன் காரணம் அறிய தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் உதவி மையத்துக்கு நேற்று வந்தனர்.
பெண்கள் தர்ணா
அவ்வாறு ஆண்டிப்பட்டி, போடி, தேவாரம் போன்ற பகுதிகளில் இருந்து வந்திருந்த பெண்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கூறும்போது, 'எங்களில் பலருக்கு சொந்த வீடு இல்லை. கூலித்தொழில் செய்து வருகிறோம். எங்களுக்கு மகளிர் உரிமைத்தொகை கிடைக்கவில்லை. வாடகை வீடுகளில் வசிப்பவர்களுக்கு கிடைக்கவில்லை. ஆனால் வீட்டின் உரிமையாளருக்கு கிடைத்துள்ளது. மகளிர் சுயஉதவிக்குழு மூலம் கடன் பெற்றவர்களுக்கு வருமான வரி செலுத்துவதாக கூறி உரிமைத்தொகை கிடைக்கவில்லை. எனவே, தகுதியான அனைவருக்கும் உரிமைத்தொகை கிடைக்க வேண்டும். மதுக்கடைகளால் பல பிரச்சினைகள் ஏற்படுகிறது. மதுக்கடைகளை மூட வேண்டும்' என்றனர்.
போராட்டம் நடத்திய பெண்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையை தொடர்ந்து பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அங்கு சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.