திராவிட இயக்கம் இல்லையென்றால் பெண்கள் படித்திருக்க முடியாது அமைச்சர் எ.வ.வேலு பேச்சு

திராவிட இயக்கம் இல்லையென்றால் பெண்கள் படித்திருக்க முடியாது என்று அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.

Update: 2022-10-21 18:25 GMT

வாணியம்பாடி

திராவிட இயக்கம் இல்லையென்றால் பெண்கள் படித்திருக்க முடியாது என்று அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.

நலத்திட்ட உதவிகள்

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி இஸ்லாமிய பெண்கள் கல்லூரி வளாகத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை சார்பில் 300 உலமாக்களுக்கு சைக்கிள்களும், வருவாய்த்துறை மற்றும் வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பில் மொத்தம் ரூ.7 கோடி 15 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் அமர் குஷ்வாஹா தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் க.தேவராஜி, நல்லதம்பி, வில்வநாதன், மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் என்.கே.ஆர்.சூரியகுமார், நகர மன்ற தலைவர் உமா சிவாஜி கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி வரவேற்று பேசினார்.

சிறப்பு அழைப்பாளராக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்துகொண்டு உலமாக்களுக்கு சைக்கிள்கள், திருநங்கைகளுக்கு வீட்டுமனை பட்டா, விவசாயிகளுக்கு விவசாய உபகரணங்கள் மற்றும் இடுபொருட்கள் உள்பட 713 பயனாளிகளுக்கு ரூ.7 கோடியே 15 லட்சத்து 58 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

திராவிட இயக்கம் இல்லையென்றால்

தமிழகத்தில் பெண்கள் படிப்பதற்கு வழிவகை செய்தது திராவிட இயக்கம். நீதி கட்சி தோன்றவில்லை என்றால் திராவிட இயக்கம் இல்லாமல் போயிருந்தால் பெண்கள் இன்று வரை படித்திருக்க முடியாது. அரசின் பல்வேறு துறைகளில் பெண் அதிகாரிகள் இருப்பதற்கும், அனைத்து அரசு தேர்வுகளில் மாணவிகள், ஆண்களை பின்னுக்கு தள்ளி முதலிடத்தில் வருகிறார்கள், இதற்கெல்லாம் காரணம் சமூக நீதியை நோக்கி செல்லும் இந்த திராவிட இயக்கம்.

பெண்கள் வளர்ச்சியடைய தேவையான அடிப்படை தேவைகளை நிறைவு செய்ய உந்து சக்தியாக இருப்பது திராவிட இயக்கம் தான். பெண்களின் வளர்ச்சியடைய பல்வேறு திட்டங்களை தீட்டி வரும் அரசு தான் தற்போதைய அரசு.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் நகர கூட்டுறவு வங்கி தலைவர் வி.எஸ்.சாரதி குமார், மாவட்ட கூட்டுறவு பால்வளத் தலைவர் எஸ்.ராஜேந்திரன், ஆலங்காயம் ஒன்றியக் குழு தலைவர் சங்கீதா பாரி, வாணியம்பாடி நகராட்சி ஆணையாளர் மாரி செல்வி, பேரூராட்சி செயலாளர்கள் ஆ.செல்வராஜ், ஸ்ரீதர், இஸ்லாமிய பெண்கள் கல்லூரி செயலாளர் சுனா கைசர் அஹமத் மற்றும் அதிகாரிகள், பயனாளிகள் கலந்து கொண்டனர். முடிவில் வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் பிரேமலதா நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்