குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் மனு கொடுத்த பெண்கள்

தென்காசியில் குறைதீர்க்கும் கூட்டத்தில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் மனு கொடுத்தனர்.

Update: 2023-08-07 19:15 GMT

தென்காசியில் குறைதீர்க்கும் கூட்டத்தில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் மனு கொடுத்தனர்.

குறைதீர்க்கும் கூட்டம்

தென்காசி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். வருவாய் அலுவலர் பத்மாவதி, கலால் உதவி ஆணையர் ராஜ மனோகரன், பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சங்கர நாராயணன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெயபிரகாஷ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இளவரசி, உதவி அலுவலர் ராமசுப்பிரமணியன் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில் உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் 13 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 8 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

காலிக்குடங்களுடன் பெண்கள்

செங்கோட்டை தாலுகா புதூர் பேரூராட்சி பூலாங்குடியிருப்பு பட்டுப்பண்ணை ரோடு பகுதியைச் சேர்ந்த பெண்கள் காலி குடங்களுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து கோரிக்கை மனு கொடுத்தனர். அதில், எங்கள் பகுதிக்கு பூலாங்குடியிருப்பு பாறையடி கிணற்றிலிருந்து சுமார் 45 ஆண்டுகளுக்கு முன்பு குடிநீர் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு குடிநீர் இணைப்பு கேட்டு தேவைப்படுபவர்கள் பேரூராட்சியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்து விண்ணப்பங்கள் கொடுத்துள்ளோம். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எங்கள் பகுதியில் சொந்த பணத்தில் ஆழ்துளை கிணறு அமைத்தும் பாறை பகுதியாக இருப்பதால் குடிநீர் கிடைப்பதில்லை. எனவே புதூர் பேரூராட்சி மூலம் வேறு இடத்தில் ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீருக்கு விண்ணப்பித்த மனுதாரர்களுக்கு புதிய குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும்.

மேலும் பேரூராட்சி மூலம் வழங்கப்படும் குடிநீர் நாள் ஒன்றுக்கு 5 குடம் மட்டுமே எங்களுக்கு கிடைக்கிறது. இது போதுமானதாக இல்லை. எங்கள் பகுதியில் தாமிரபரணி கூட்டு குடிநீர் மாதம் ஒருமுறை அல்லது இருமுறை மட்டுமே வழங்கப்படுகிறது. இதுதொடர்பாக பேரூராட்சி நிர்வாகத்திலும் மனு கொடுத்துள்ளோம். ஆனாலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் இதுெதாடர்பாக நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறோம் என்று கூறப்பட்டு இருந்தது.

மருதங்கிணறு கிராம விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் கொடுக்கப்பட்டுள்ள மனுவில், கிராம உதவியாளர் கோதண்டராமன் என்பவர் நாலுவாசன்கோட்டைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவரை மீண்டும் மருதங்கிணறு கிராம உதவியாளராக மாற்ற வேண்டும் என்று கூறிஇருந்தனர்.

பெயர் பலகை

பாவூர்சத்திரம் அருகே உள்ள மாடியனூர் பகுதியைச் சேர்ந்த ராஜாராம் என்பவர் பொதுமக்கள் சார்பில் கொடுத்துள்ள மனுவில், எங்கள் ஊர் ஆவுடையானூர் பஞ்சாயத்தில் கிராமம் மற்றும் குக்கிராமம் அட்டவணையில் மொத்தம் 18 கிராமங்கள் உள்ளன. நெடுஞ்சாலைத்துறை சார்பில் பாவூர்சத்திரம் - கடையம் சாலையில் சந்தன குமார் பட்டி என்ற பெயரில் பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. இந்த பெயரில் கிராம பட்டியலில் எந்த கிராமமும் இல்லை.

இதுகுறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் நெடுஞ்சாலைத்துறையில் கேட்டபோது கிராமங்கள் மற்றும் குக்கிராமங்களுக்கு மட்டுமே பெயர் பலகை வைக்கப்படும் என்று பதில் வந்துள்ளது. எனவே விதிமுறைகளை மீறி ஒரு தெருவிற்கு பெயர் பலகை வைக்க அனுமதி அளித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்தும் தவறுதலாக வைக்கப்பட்ட பெயர் பலகையை அகற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நூலகத்திற்கு காமராஜர் பெயர்

தமிழ்நாடு நாடார் உறவின் முறைகள் கூட்டமைப்பு நிறுவன தலைவர் லூர்து நாடார் கொடுத்துள்ள மனுவில், தென்காசியில் புதிதாக கட்டப்பட உள்ள நூலகத்திற்கு காமராஜர் பெயரை சூட்ட வேண்டும் என்று தெரிவித்து இருந்தார்.

வீரகேரளம்புதூர் தாலுகா வீராணம் தெற்கு தெருவை சேர்ந்த பழனிச்சாமி என்பவர் கொடுத்துள்ள மனுவில் தனது மகன் அழகேசன் (வயது 25) என்பவர் கடந்த 16-11-2021 அன்று மின்னல் தாக்கி இறந்துவிட்டார். இதற்காக அரசு நிதி உதவி கேட்டு மனு செய்து 6 மாதங்கள் ஆகியும் இதுவரை எந்த பதிலும் இல்லை. எனவே நிதி உதவி வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.



Tags:    

மேலும் செய்திகள்