இ-சேவை மையங்களில் உரிமைத்தொகை மேல்முறையீடு செய்ய குவிந்த பெண்கள்

நெல்லை மாவட்டத்தில் இ-சேவை மையங்களில் மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கு மேல்முறையீடு செய்ய பெண்கள் குவிந்தனர்.

Update: 2023-09-19 20:20 GMT

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை கடந்த 15-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழகம் முழுவதும் 1 கோடியே 6 லட்சம் பேருக்கு இந்த மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டு உள்ளது. 35 சதவீத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு உள்ளது. இவர்களது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கான காரணம் செல்போனில் குறுந்தகவல் மூலம் தெரிவிக்கப்படும். மேலும் தகுதி இருந்தும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டால் அவர்கள் மேல்முறையீடு செய்யலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதற்கிடையே மகளிர் உரிமைத்தொகைக்கான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது ஏன்? என்பதை தெரிந்து கொள்ளும் வகையில் https://kmut.tn.gov.in என்ற புதிய இணையதளம் ஒன்றை தமிழக அரசு தொடங்கி உள்ளது. இந்த புதிய இணையதளம் மூலம் மகளிர் உரிமைத்தொகை தனக்கு எதனால் கிடைக்கவில்லை என்பதை தாங்களாகவே தெரிந்து கொள்ளலாம். அதாவது அந்த இணையதளத்தில் செல்போன் எண்ணை உள்ளீடு செய்து விண்ணப்பத்தின் நிலையை அறிய முடியும். மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பத்தில் கொடுத்த ஆதார் எண்ணை பதிவிட்டாலும் தகவல் கிடைக்கும்.

நேற்று முதல் காரணத்தை தெரிந்து கொண்டு, மேல் முறையீடு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்காக நெல்லை மாவட்டத்தில் நெல்லை கலெக்டர் அலுவலகம் மற்றும் தாலுகா அலுவலகங்களில் உள்ள இ-சேவை மையத்தில் பெண்கள் குவிந்தனர். காலை நேரத்தில் இணையதள சேவை வேகமாக இயங்காததால் தகவல்களை பெறுவதில் சிரமம் இருந்தது. புதிய இணையதளத்தை பயன்படுத்த பொதுமக்கள் பலர் ஒரே நேரத்தில் முயற்சி செய்ததால் சர்வர் முடங்கியது. விரைவில் அதனை சீரமைத்து சேவையை வழங்குவதற்கு ஊழியர்கள் நடவடிக்கை எடுத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்