டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பெண்கள் முற்றுகை போராட்டம்

வெள்ளப்பட்டி ஊராட்சியில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பெண்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-06-20 18:51 GMT

டாஸ்மாக் கடை

கடவூர் தாலுகா வெள்ளப்பட்டி ஊராட்சி பாரப்பட்டியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் பாரப்பட்டி பஸ் நிறுத்தம் அருகே டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இங்கு மது அருந்தும் சிலர் பஸ் நிறுத்தம் அருகே அரைகுறை ஆடையுடன் படுத்துக் கொள்கின்றனர். இதனால் பள்ளி செல்லும் குழந்தைகள் மற்றும் பஸ் நிறுத்தத்தில் நிற்கும் பெண்கள் அச்சத்துடன் நிற்க வேண்டியது உள்ளது.

இந்த டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பெண்கள் பாரப்பட்டியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி கடையின் நுழைவுவாயில் அருகே முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவல் அறிந்த குளித்தலை போலீஸ் துணை சூப்பிரண்டு ஸ்ரீதர், இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், வெள்ளைப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் முருகேசன், வருவாய் ஆய்வாளர் நெப்போலியன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது டாஸ்மாக் கடை 2 மாதத்திற்குள் அகற்றப்படும் எனவும், தமிழக அரசு 500 டாஸ்மாக் கடைகளை மூடுவதாக அறிவித்து பட்டியல் வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலில் இந்த டாஸ்மாக் கடையும் உள்ளது. எனவே இந்த டாஸ்மாக் கடை கண்டிப்பாக மூடப்படும் என்று உறுதி அளித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட பெண்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்