பெண்களுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும்
கீழ்மொணவூர், மேல்மொணவூர் ஊராட்சியில் விதவை, கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என்று குறைதீர்வு கூட்டத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.
கீழ்மொணவூர், மேல்மொணவூர் ஊராட்சியில் விதவை, கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என்று குறைதீர்வு கூட்டத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.
குறைதீர்வு கூட்டம்
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு வேலூர் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி மற்றும் அதிகாரிகள் முன்னிலை வகித்தனர்.
இதில், முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா உள்ளிட்டவை தொடர்பாக 300-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் குமாரவேல்பாண்டியன் உத்தரவிட்டார். மேலும் அவர், மாற்றுத்திறனாளிகள் இருக்கும் இடத்திற்கு சென்று அவர்களின் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்று கொண்டார்.
கருணை அடிப்படையில் பணி
கூட்டத்தில், சிவசக்தி சேனா இந்துமக்கள் இயக்க வேலூர் மாவட்ட தலைவர் கோபால்ஜி மற்றும் நிர்வாகிகள் அளித்த மனுவில், சென்னை ஐகோர்ட்டு சாலைகளில் உள்ள தலைவர்கள் சிலைகளை அகற்றும்படி கடந்த 7-ந் தேதி உத்தரவிட்டுள்ளது. அதன்படி வேலூர் மாவட்டத்தில் அனைத்து சாலைகள் மற்றும் அரசு புறம்போக்கு இடத்தில் உள்ள தலைவர்கள் சிலைகளை அகற்ற உடனடியாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
வேலூரை அடுத்த கீழ்மொணவூர், மேல்மொணவூர் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், எங்கள் பகுதியில் விதவைகள் மற்றும் கணவரால் கைவிடப்பட்டவர்கள் என்று 38 பெண்கள் உள்ளனர். அவர்கள் நிரந்தர வேலை இல்லாததால் வறுமையில் தவிக்கின்றனர். எனவே கருணை அடிப்படையில் அனைவருக்கும் பணி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.
கூடுதல் இடம் வழங்க கோரிக்கை
பொன்னை அருகே உள்ள பி.என்.பாளையம் அருந்ததியர் காலனியை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், எங்கள் காலனியில் 80 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். பல ஆண்டுகளுக்கு முன்பு அரசு இலவச வீட்டுமனை பட்டா வழங்கியது. அதில், ஒரு சென்ட் அல்லது 1½ சென்ட் இடம் மட்டுமே உள்ளது. ஒரு சிலருக்கு 10-க்கு 10 அடி இடம் கொடுத்துள்ளனர். அந்த இடம் வீடு கட்டுவதற்கு போதுமானதாக இல்லை. எனவே அங்குள்ள புறம்போக்கு இடத்தில் கூடுதல் இடம் வழங்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
காட்பாடியை அடுத்த சேனூரை சேர்ந்த ரமேஷ் அளித்த மனுவில், எங்களது கிராமத்தில் எனது தந்தையின் பெயரில் இருந்த வீட்டுமனையை அவர் உயிரோடு இருக்கும்போது எனது பெயருக்கு மாற்றம் செய்து விட்டார். இந்த நிலையில் எங்கள் கிராமத்தை சேர்ந்த ஒருவர் எனது வீட்டுமனைக்கு போலி பட்டா தயாரித்து மற்றொரு நபருக்கு பத்திரப்பதிவு செய்துள்ளார். அந்த பத்திரப்பதிவை ரத்து செய்து, போலி பட்டா தயாரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
கூட்டத்தில், குடியாத்தம் கொல்லமங்களம் கிராம நிர்வாக அலவலர் குமார் பணி காலத்தில் உயிரிழந்தையொட்டி அவருடைய மனைவி பிரபாவதிக்கு கருணை அடிப்படையில் இளநிலை வருவாய் ஆய்வாளராக பணி நியமனம் செய்ததற்கான ஆணையை கலெக்டர் குமாரவேல்பாண்டியன் வழங்கினார்.