காலிக்குடங்களுடன் பெண்கள் மறியல் முயற்சி
சிக்கல் பகுதியில் குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி காலிக்குடங்களுடன் பெண்கள் மறியல் செய்ய முயன்றனர்.;
சாயல்குடி,
சிக்கல் பகுதியில் குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி காலிக்குடங்களுடன் பெண்கள் மறியல் செய்ய முயன்றனர்.
ஆர்ப்பாட்டம்
சாயல்குடி அருகே சிக்கல் கிராமத்தில் சிக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நிலவும் குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தாலுகா செயலாளர் அம்ஜத் கான் தலைமை தாங்கினார்.
தாலுகா குழு உறுப்பினர்கள் போஸ், பச்சமால், சுப்ரமணியன், நம்புராஜன், ராமசாமி, ஜெயக்குமார், சக்தி குமார், ராமாயி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் காசிநாததுரை, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் முத்துராமன், மயில்வாகனன் ஆகியோர் பேசினர். இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.
மறியல் முயற்சி
சிக்கல், சிறைக்குளம், பனிவாசல், சொக்கணை, தனிச்சயம், இதம்பாடல், கொத்தங்குளம், கீரந்தை, பேய்க்குளம், பன்னந்தை, வால்நோக்கம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராம மக்களுக்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் முறையாக குடிநீர் வழங்கவில்லை. சிக்கல் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஊராட்சிகளுக்கு குடிநீர் தங்கு தடை இன்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
அப்போது திடீரென பெண்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்களை கீழக்கரை துணை போலீஸ் சூப்பிரண்டு சுதிர்லால், சிக்கல் இன்ஸ்பெக்டர் முருகதாசன் மற்றும் போலீசார் தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை
இதற்கிடையே கடலாடி ஒன்றிய ஆணையாளர் ஜெய ஆனந்தன், வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜா, கடலாடி தாசில்தார் ரங்கராஜ் மற்றும் போலீசார் பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி காவிரி கூட்டு குடிநீர் தடை இன்றி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.