குடிநீர் ேகட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் மறியல்
குடிநீர் ேகட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் மறியலில் ஈடுபட்டனர்.
சாலை மறியல்
பெரம்பலூர் நகராட்சியில் 12-வது வார்டுக்கு உட்பட்ட கம்பன் தெருவில் கடந்த 10 நாட்களாக நகராட்சி நிர்வாகத்தின் மூலம் காவிரி குடிநீர் வழங்குவது தடைபட்டுள்ளது. இது குறித்து அப்பகுதி மக்கள் நகராட்சி நிர்வாகத்தினரிடம் சில நாட்களாகவே முறையிட்டு வந்துள்ளனர். ஆனால் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த கம்பன் தெருவை சேர்ந்த பெண்கள், 10 நாட்களாக குடிநீர் வழங்காததால், தங்களது இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் நேற்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
போக்குவரத்து பாதிப்பு
இது குறித்து தகவல் அறிந்த போலீஸ் துணை சூப்பிரண்டு சஞ்சீவிகுமார் தலைமையில் போலீசார் மற்றும் நகராட்சி ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அவர்கள், மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் அமைதி பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உடனடியாக குடிநீர் வழங்க ஏற்பாடு செய்வதாக அவர்கள் கூறியதால், மறியலை கைவிட்டு பெண்கள் கலைந்து சென்றனர்.
மறியலால் பெரம்பலூர் காமராஜர் வளைவு-சங்குப்பேட்டை இடையே சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.