குடிநீர் கேட்டு பெண்கள் காலிக்குடங்களுடன் சாலைமறியல்

குடிநீர் கேட்டு பெண்கள் காலிக்குடங்களுடன் சாலைமறியல்

Update: 2023-05-28 19:19 GMT

கபிஸ்தலம் அருகே குடிநீர் கேட்டு பெண்கள் காலிக்குடங்களுடன் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் 4 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பழுது

கபிஸ்தலம் அருகே திருவைக்காவூர் ஊராட்சி கீழமாஞ்சேரி கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி நீண்ட காலமாக பழுதடைந்து உள்ளது. கடந்த 2 மாதமாக குடிநீர் சரிவர வினியோகிக்கப்படவில்லை. இதனால் கீழமாஞ்சேரி தெற்கு தெரு, வடக்கு தெரு, மெயின் ரோடு, குடியானத்தெரு பகுதிகளில் உள்ள மக்களுக்கு கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வந்தது.

மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி பழுதடைந்ததால் புதிய மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி கட்டி தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

காலிக்குடங்களுடன் சாலைமறியல்

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை தெரிவித்தும் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்தநிலையில் நேற்று காலை குடிநீர் வழங்கக்கோரி அந்த பகுதி பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கீழமாஞ்சேரி மெயின் ரோடு சாலையில் காலிக்குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பேச்சுவார்த்தை

தகவல் அறிந்த பாபநாசம் ஒன்றியக்குழு தலைவர் சுமதி கண்ணதாசன், கபிஸ்தலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அனிதா கிரேசி, ஒன்றிய கவுன்சிலர் விஜயன், ஊராட்சி மன்ற தலைவர் பவுன்னம்மாள் பொன்னுசாமி, மற்றும் வருவாய்த்துறையினர், போலீஸ்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடனடியாக குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து சாலைமறியல் போராட்டம் கைவிடப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்