குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்

களக்காடு அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-09-02 18:38 GMT

களக்காடு:

களக்காடு அருகே உள்ள கடம்போடுவாழ்வு பஞ்சாயத்துக்கு உட்பட்ட சுப்பிரமணியபுரம் கிராமத்திற்கு தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 15 நாட்களாக சுப்பிரமணியபுரத்துக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் பரிதவித்து வருகின்றனர். இதுபற்றி குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் மனுக்கள் கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் குடிநீர் வழங்கக்கோரி பெண்கள் நேற்று காலிக்குடங்களுடன் திரண்டு, சுப்பிரமணியபுரத்தில் களக்காடு-நாங்குநேரி பிரதான சாலையில் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவல் அறிந்த களக்காடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலம்மாள், கடம்போடுவாழ்வு பஞ்சாயத்து தலைவர் அண்ணாதுரை ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடமும் செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய சப்-இன்ஸ்பெக்டர், உடனடியாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

களக்காடு நகராட்சிக்கு உட்பட்ட 15-வது வார்டில் ஒரேப் ஏ.ஜி. சபை அருகே, படலையார்குளம் உள்பட பல்வேறு இடங்களில் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வரும் நிலையில் உடைப்பை அடைக்க குடிநீர் வடிகால் வாரியத்தினர் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டினர். மேலும் குழாய் உடைப்புகளை உடனடியாக சீரமைக்கவும் வேண்டுகோள் விடுத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்