ஜவுளி விற்பனைக்காக கடன் வாங்கிய பெண்ணுக்கு நேர்ந்த பயங்கரம்: பணத்தை கேட்டு நிதி நிறுவனம் மிரட்டியதால் மனைவியை வெட்டிக்கொன்ற டிரைவர்- மேலூர் போலீசில் சரண் அடைந்தார்
ஜவுளி விற்பனைக்காக நிதி நிறுவனத்தில் பெண் கடன் வாங்கி இருந்த நிலையில், அதனை திரும்ப கேட்டு நிதி நிறுவனத்தினர் கொடுத்த தொந்தரவால், அந்த பெண்ணை அவருடைய கணவர் வெட்டிக் கொன்றுவிட்டு மேலூர் போலீசில் சரண் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலூர்,
ஜவுளி விற்பனைக்காக நிதி நிறுவனத்தில் பெண் கடன் வாங்கி இருந்த நிலையில், அதனை திரும்ப கேட்டு நிதி நிறுவனத்தினர் கொடுத்த தொந்தரவால், அந்த பெண்ணை அவருடைய கணவர் வெட்டிக் கொன்றுவிட்டு மேலூர் போலீசில் சரண் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
டிரைவர்
மதுரை மாவட்டம் மேலூரில் உள்ள எம்.மலம்பட்டியை சேர்ந்தவர் முனிராஜா (வயது 48). இவருடைய மனைவி கலைவாணி (42). இவர்களுக்கு பொன்மணிபாரதி என்ற மகளும், நரசிம்மன் என்ற மகனும் உள்ளனர். டிரைவராகவும், கூலி வேலைகளையும் முனிராஜா செய்துவந்துள்ளார்.
இந்தநிலையில் வட்டிக்கு கடன் வழங்கும் மேலூரில் உள்ள நிறுவனம் ஒன்றில் கலைவாணி கடன் பெற்றிருந்ததாகவும், அந்த பணத்தில் கிராமங்களுக்கு சென்று பெண்களுக்கான ஜவுளி விற்பனையை அவர் செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் எதிர்பார்த்த வருவாய் கிடைக்காததால் கடனை திருப்பி செலுத்த முடியாமல் சிரமங்களை கலைவாணி சந்தித்து வந்துள்ளார். இதற்கிடையில் கடன் கொடுத்த நிதி நிறுவனத்தினர் கலைவாணியின் வீட்டுக்கு சென்று அடிக்கடி தொந்தரவு கொடுத்துள்ளனர்.
வாக்குவாதம்
அதன் காரணமாக கலைவாணிக்கும் அவரது கணவர் முனிராஜாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் கோபித்துக்கொண்டு கலைவாணி மதுரையில் உள்ள தன் தாயாரின் வீட்டுக்கு மகனை அழைத்துக்கொண்டு வந்துவிட்டார். இந்தநிலையில் நிதி நிறுவனத்தினர் முனிராஜாவிடம் அவரது மனைவி பெற்ற கடனுக்காக தொடர்ந்து தொந்தரவு கொடுத்து மிரட்டியாகவும் கூறப்படுகிறது. இதனால் முனிராஜா ஆத்திரம் அடைந்துள்ளார்.
முனிராஜாவின் பிறந்த நாளான நேற்று மேலூரில் உள்ள அவரது குலதெய்வ கோவிலில் சாமி கும்பிட்டுவிட்டு மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழலாம் எனக்கூறி மதுரையில் மாமியார் வீட்டில் இருந்த மனைவி கலைவாணியை அழைத்து வந்துள்ளார். பின்னர் கோவிலுக்கு சென்றுவிட்டு தன் வீட்டுக்கு திரும்பி வந்துள்ளார்.
வெட்டிக்கொலை
பிள்ளைகள் பள்ளிக்கு சென்ற நிலையில் வீட்டில் கணவன்-மனைவி இருந்தபோது, நிதி நிறுவனத்தினர் வந்து பணம் கட்டுமாறு கூறி சத்தம் போட்டார்களாம். அதன் காரணமாக கணவன்-மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த முனிராஜா மனைவியை சரமாரியாக அரிவாளால் வெட்டி உள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த கலைவாணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனைத் தொடர்ந்து முனிராஜா மேலூர் போலீஸ் நிலையத்திற்கு சென்று சரண் அடைந்தார். நிதி நிறுவனத்தினர் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக தனது மனைவியை வெட்டி படுகொலை செய்துவிட்டதாக கூறி அழுதுள்ளார்.
கைது
மேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சார்லஸ், தனி பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் சம்பவம் நடந்த வீட்டுக்கு விரைந்து சென்று, கலைவாணியின் உடலை மீட்டு பரிசோதனைக்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முனிராஜா மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.