திருமண அழைப்பிதழ் கொடுப்பதுபோல் நடித்து பெண்ணை கட்டிப்போட்டு 8¾ பவுன் நகைகள் கொள்ளை - குமரியில் அதிர்ச்சி
வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கட்டிப்போட்டு 8¾ பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
குமரி,
குமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே உள்ள சூழால் பகுதியை சேர்ந்தவர் கீதா (வயது 52). இவருடைய கணவர் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உண்டு. இருவரும் திருமணமாகி தனியாக வசித்து வருகிறார்கள். இதனால் வீட்டில் கீதா மட்டும் தனியாக வசித்து வருகிறார்.
இந்தநிலையில் நேற்று மதியம் 1 மணியளவில் கீதா வீட்டில் இருந்த போது 2 மர்ம நபர்கள் வந்தனர். அவர்கள் திருமண அழைப்பிதழ் கொடுக்க வந்திருப்பதாக கூறினர். உடனே, கீதா அவர்களை வீட்டின் உள்ளே அழைத்து அமர வைத்து உபசரிக்க தொடங்கினார். அவர்களிடம், 'நீங்கள் யார்? எங்கிருந்து வருகிறீர்கள்?' என்று கேட்டார். அதற்கு அவர்கள் மழுப்பலாக பதில் கூறினர்.
அப்போது திடீரென 2 பேரும் கீதாவை தாக்கி அவரது கை, கால்களை கட்டி வாயில் துணியை நுழைத்து கீழே தள்ளினர். தொடர்ந்து அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த 8¾ பவுன் நகைகளை கொள்ளையடித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். கீதாவின் வாயில் துணி நுழைக்கப்பட்டிருந்ததால் அவரால் சத்தம் போட முடியவில்லை.
சிறிது நேரம் கழித்து வாயில் இருந்த துணியை ஒரு வழியாக எடுத்துவிட்டு கீதா சத்தம் போட்டு கத்தினார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் அவரது கை, கால்களில் இருந்த கட்டுகளை அவிழ்த்து விட்டனர். தொடர்ந்து நடந்த சம்பவங்களை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து கொல்லங்கோடு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கீதா மற்றும் அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். இதுகுறித்த புகாரின் பேரில் வீட்டில் இருந்த நகையை கொள்ளையடித்து சென்றவர்கள் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கட்டிப்போட்டு 8¾ பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.