மானாமதுரை
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை சேர்ந்தவர் குருவம்மாள் (வயது 53). இவரது மகள் பாண்டி மீனா தனது குடும்பத்தினருடன் மானாமதுரை சவேரியர்புரத்தில் வசித்து வருகிறார். இந்த நிலையில் குருவம்மாள் மகள் வீட்டிற்கு வந்திருந்தார். பேரனுக்கு பிறந்தநாள் என்பதால் அனைவரும் மானாமதுரையில் உள்ள ஒரு தியேட்டருக்கு சென்று ஜெயிலர் சினிமா படம் பார்த்தனர். சினிமா பார்த்து விட்டு தியேட்டரை விட்டு வெளியே வந்த போது ராமேசுவரம் -மதுரை நான்கு வழி சாலையை குருவம்மாள் கடந்தார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே அவர் பலியானார்.
இது குறித்து மானாமதுரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பேரன் பிறந்த நாள் கொண்டாட வந்த இடத்தில் பெண் பலியானது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.