லாரி சக்கரத்தில் சிக்கி பெண் பலி - மகன்கள் கண் எதிரே பரிதாபம்
பூந்தமல்லி அருகே லாரி சக்கரத்தில் சிக்கி மகன்கள் கண் எதிரே பெண் பரிதாபமாக பலியானார்.;
பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை அகரமேல் சோழன் நகரை சேர்ந்தவர் சேவியர். ஓமன் நாட்டில் பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி பாத்திமா (வயது 45). இவர்களுக்கு 2 மகன்கள். மூத்த மகன் ஜஸ்பர் ரீகன் (23), எம்.எஸ்சி படித்துவிட்டு வீட்டில் இருக்கிறார். 2-வது மகன் அக்வின் (13), 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.
நேற்று மதியம் பாத்திமாவுக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் அம்பத்தூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்று விட்டு பாத்திமா, ஜஸ்பர் ரீகன், அக்வின் ஆகிய 3 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை ஜஸ்பர் ரீகன் ஓட்டினார்.
பருத்திப்பட்டு அருகே ஆவடி - அயப்பாக்கம் சாலையில் வந்தபோது, அந்த வழியாக லாரி, இவர்களது மோட்டார் சைக்கிள் மீது உரசியது. இதில் நிலை தடுமாறி 3 பேரும் கீழே விழுந்தனர். இதில் லாரி சக்கரத்தில் சிக்கிய பாத்திமா, மகன்கள் கண் எதிரேயே பரிதாபமாக இறந்தார். ஜஸ்பர் ரீகன் மற்றும் அக்வின் இருவரும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். இதுகுறித்து ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.