பணத்தகராறில் பெண் கட்டையால் அடித்து கொலை; கள்ளக்காதலன் கைது

கரூர் அருகே பணத்தகராறில் கட்டையால் பெண்ணை அடித்துக்கொன்ற கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர். இந்த கொலை குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

Update: 2023-08-31 18:25 GMT

கள்ளக்காதல்

கரூர் அருகே உள்ள அரசு காலனி தங்கராஜ் நகர் பகுதியை சேர்ந்தவர் சிராஜுதீன். இவரது மனைவி ரூபிதாபானு (வயது 50). இந்த தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார். சிராஜுதீன் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். மகளுக்கு திருமணமாகி வெளியூரில் வசித்து வருகிறார். இதனால் ரூபிதாபானு அரசு காலனியில் தனியாக வசித்து வந்தார்.

இந்நிலையில் பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக கடந்த 10 ஆண்டுகளாக ரூபிதாபானுவிற்கும், அதே பகுதியை சேர்ந்த சாமியானா பந்தல் அமைத்து தொழில் செய்து வரும் ராஜேந்திரன் என்பவருக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியதாக கூறப்படுகிறது.

அடித்துக்கொலை

இந்நிலையில் நேற்று ராஜேந்திரன், ரூபிதாபானுவின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது 2 பேருக்கும் இடையே பணம் கொடுக்கல், வாங்கல் ெதாடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த ராஜேந்திரன், ரூபிதாபானுவை கீழே தள்ளிவிட்டு கட்டையால் தலையில் அடித்துள்ளார். இதனால் பலத்த காயம் அடைந்த ரூபிதாபானு ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதையடுத்து ராஜேந்திரன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

கள்ளக்காதலன் கைது

இதற்கிடையில் ரூபிதாபானுவின் வீட்டிற்கு உறவினர் ஒருவர் வந்துள்ளார். அப்போது ரூபிதாபானு இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து அக்கம், பக்கத்தினருக்கும், வாங்கல் போலீசாருக்கும் தகவல் தெரிவித்துள்ளார்.

தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, ரூபிதாபானுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை குறித்து வாங்கல் போலீசார் வழக்குப்பதிந்து, கள்ளக்காதலன் ராஜேந்திரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்