நகைகள்-பணத்தை கொள்ளையடித்த பெண் கைது

வீட்டின் பூட்டை உடைத்து நகைகள்-பணத்தை கொள்ளையடித்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-10-09 17:45 GMT

நகை-பணம் கொள்ளை

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், மங்களமேடு அருகே உள்ள ெலப்பைக்குடிக்காடு கிராமத்தை சேர்ந்தவர் ஜாஹீர் உசேன்(வயது 55). இவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதை அடுத்து வீட்டை பூட்டி விட்டு தனது குடும்பத்தினருடன் திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக சென்று விட்டார். பின்னர் அங்கு சிகிச்சை முடிந்த பிறகு மீண்டும் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த 9 பவுன் நகைகள் மற்றும் ரூ.7 ஆயிரத்தை மர்மநபர்கள் திருடி சென்று இருப்பது தெரிய வந்தது. பின்னர் அவர் இது குறித்து மங்களமேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

சிறையில் அடைப்பு

இந்த நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளாதேவி உத்தரவின்படி, மங்களமேடு உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு சீராளன் வழிகாட்டுதலின்படி மங்களமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கொள்ளையர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்றது. இதில் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் வடக்கு மேலூர் முருகன் கோவில் தெருவை சேர்ந்த சக்திவேல் மனைவி வேளாங்கண்ணி(44) என்பது தெரிய வந்தது. இந்நிலையில் வேளாங்கண்ணி ஏற்கனவே கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகரில் செய்த குற்ற வழக்கிற்காக கடலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டு இருப்பதை அறிந்து தனிப்படையினர் நீதிமன்ற உத்தரவு பெற்று வேளாங்கண்ணியை காவலில் எடுத்தனர். மேலும் அவரிடம் இருந்த 9 பவுன் நகைகளை போலீசார் பறிமுதல் செய்து, அவரை மீண்டும் கடலூர் பெண்கள் சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்