கொலைக்கு உடந்தையாக இருந்ததாக பெண் கைது
கொலைக்கு உடந்தையாக இருந்ததாக பெண் கைது செய்யப்பட்டார்.
துவரங்குறிச்சியை அடுத்த பில்லுப்பட்டியை சேர்ந்தவர் பெருமாள். இவரது மனைவி இளஞ்சியம்(வயது 46). இவர் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 3-ந் தேதி அதே பகுதியில் உள்ள ஒரு மரத்தில் தூக்குப்போட்ட நிலையில் மர்மமான முறையில் பிணமாக தொங்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து துவரங்குறிச்சி போலீசார் மர்ம மரணம் என்ற அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் சம்பவ இடத்தில் தடயங்கள் ேசகரிக்கப்பட்டு, கைரேகைகளும் பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், இளஞ்சியம் கொலை செய்யப்பட்டதாகவும், இந்த கொலையில் தொடர்புடையவர்களை கைது செய்ய வேண்டும் என்றும் குடும்பத்தினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதற்கிடையே சம்பவம் நடத்த இடத்தில் பயன்பாட்டில் இருந்த செல்போன்கள் குறித்து போலீசார் ரகசிய விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதில் சிலரின் செல்போன்கள் தொடர்ந்து அந்த இடத்தில் குறிப்பிட்ட நேரத்தில் செயல்பட்டு வந்தது தெரியவந்தது.
இதையடுத்து திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் உத்தரவின்பேரில் மணப்பாறை துணை சூப்பிரண்டு ராமநாதன் தலைமையிலான போலீசார் விசாரணையை துரிதப்படுத்தினர். இதில் இளஞ்சியம் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து மர்ம மரணம் என்று பதியப்பட்டிருந்த வழக்கு தற்போது கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டது.
இந்நிலையில் இந்த கொலையில் சம்பந்தப்பட்டவர்களுக்கு பில்லுப்பட்டியை சேர்ந்த சிவகாமி(42) பல்வேறு தகவல்களை அளித்துள்ளதாக போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து கொலைக்கு உடந்தையாக இருந்ததாக சிவகாமியை, துவரங்குறிச்சி போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த ெகாலையில் சம்பந்தப்பட்ட முக்கிய நபர்களை, தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.