வேலைக்கு சென்ற ஒரே மாதத்தில்வாலிபர் மர்மச்சாவு

குவைத் நாட்டுக்கு வேலைக்கு சென்ற ஒரே மாதத்தில் வாலிபர் மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர வேண்டும் என தந்தை கோரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2023-02-23 18:45 GMT


குவைத் நாட்டுக்கு வேலைக்கு சென்ற ஒரே மாதத்தில் வாலிபர் மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர வேண்டும் என தந்தை கோரிக்கை விடுத்துள்ளார்.

கலெக்டர் அலுவலகத்தில் மனு

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்களாச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் சுல்தான் மெய்தீன். இவர் தனது உறவினர்கள் 100-க்கும் மேற்பட்டோருடன் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் சேக்அலாவுதீன் தலைமையில் நேற்று மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு அளித்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

எனது மகன் சர்புதீன் (வயது 21). கடந்த மாதம்(ஜனவரி) 3-ந் தேதி டிரைவர் பணிக்காக குவைத் நாட்டுக்கு சென்றார்.

ஆடுமேய்க்குமாறு துன்புறுத்தல்

பின்னர் 3 நாட்கள் கழித்து எங்களிடம், சர்புதீன் செல்போனில் பேசினாா். அப்போது அவர் தன்னை குவைத்துக்கு டிரைவர் வேலைக்காக அழைத்து சென்று பாலைவனத்தில் ஆடு மேய்க்குமாறு கூறி துன்புறுத்துவதாக அழுதுகொண்டே தெரிவித்தார்.

இதை தொடர்ந்து அவர் போன் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் மீண்டும் பலமுறை தொடர்பு கொண்டும் அவருடன் பேசமுடியவில்லை.

உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர வேண்டும்

இந்த நிலையில் நேற்று முன்தினம் சர்புதீன் செல்போனை எடுத்து பேசிய ஒருவர், ஜனவரி 29-ந்தேதியே சர்புதீன் இறந்து விட்டதாக தெரிவித்தார்.

எனது மகனின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வரவும், அவரது மரணம் குறித்து உரிய விசாரணை நடத்தவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சோகம்

வெளிநாடு சென்ற வாலிபர் ஒரே மாதத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்