144 பயணிகளின் உயிரை காப்பாற்றிய விமானிகள் குழுவுக்கு குவியும் பாராட்டு

விமானத்தில் இருந்த 144 பேரின் உயிரை காப்பாற்றிய விமானிகள் குழுவுக்கு தற்போது பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Update: 2024-10-11 18:51 GMT

திருச்சி,

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியா விமானம் ஒன்று 141 பயணிகளை ஏற்றிக்கொண்டு நேற்று மாலை 5.40 மணிக்கு புறப்பட்டது. விமானம் மேலே எழும்பியதும் அதன் சக்கரங்கள் உள்ளே சென்று விடும். ஆனால், இந்த விமானத்தின் சக்கரங்கள் உள்ளே செல்லவில்லை. இதனால், அதனை மீண்டும் திருச்சி விமான நிலையத்தில் தரையிறக்குவது என முடிவு செய்யப்பட்டது.

விமானத்தின் எரிபொருள் தீரும் வரை வானில் வட்டமடித்து விட்டு அதன்பின்னர், தரையிறக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது. இதனால், விமானம் தொடர்ந்து வானத்திலேயே வட்டமடித்து கொண்டு இருந்தது. இதனிடையே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 10-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகனங்களும், 4 தீயணைப்பு வாகனங்களும் திருச்சி விமான நிலையத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டன.

விமானம் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் 26 முறை வானில் வட்டமடித்து கொண்டிருந்தது. இந்நிலையில், விமானம் 8.15 மணியளவில் பாதுகாப்பாக தரையிறங்கியது. விமானத்தில் இருந்த 144 பேரின் உயிரை காப்பாற்றிய விமானிகள் குழுவுக்கு தற்போது பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

விமானி இக்ரம் ரிபத்லி, சக விமானிகள் மைத்ரி ஶ்ரீகிருஷ்ணா, லைஷ்ராம் சஞ்சிதா தேவி, வைஷ்ணவி சுனில் நிம்பல்கர், சுஷி சிங் மற்றும் சாகேத் திலிப் வதனா ஆகியோர் கொண்ட குழுவினர், பயணிகளிடம் அச்சத்தை வெளிப்படுத்தாமல் தங்களுக்குள்ளாகவே பேசி திட்டமிட்டு விமானத்தை பத்திரமாக தரையிறக்கியுள்ளனர். சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக வானத்தில் வட்டமிட்டபோது கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பில் இருந்த விமானிகள் குழுவினர், சாதுர்யமாக செயல்பட்டு விமானத்தை தரையிறக்கினர்.

விமானம் தரையிறங்கியபோது திருச்சி விமான நிலையத்தில் கூடியிருந்த பயணிகளின் உறவினர்கள், விமான பயணிகள் உள்ளிட்ட அனைவரும் கரகோஷங்களை எழுப்பி தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தினர். மேலும், விமானத்தை பத்திரமாக தரையிறக்கிய விமானிகள் குழுவுக்கு சமூக வலைதளங்களில் பலர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்