விளையாட்டில் வெற்றி முக்கியமில்லை; முயற்சிதான் முக்கியம்

விளையாட்டில் வெற்றி முக்கியமில்லை, முயற்சிதான் முக்கியம் என்று அமைச்சர் ஆர்.காந்தி பேசினார்.;

Update:2022-12-27 23:55 IST

விளையாட்டு போட்டி

ராணிப்பேட்டை காரை கூட்டுரோடு பகுதியில் உள்ள சிறுவர்களுக்கான அரசினர் குழந்தைகள் இல்லத்தில் சமூக பாதுகாப்புத் துறை மூலம் இயங்கும் சிறுவர் சிறுமியருக்கான பாதுகாப்பு இல்லங்களில் பயிலும் மாணவ- மாணவிகளுக்கான மண்டல அளவிலான 2 நாள் விளையாட்டுப் போட்டிகள் தொடக்க விழா நடந்தது.

கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செய்து, மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து ஒலிம்பிக் தீபத்தை ஏற்றிவைத்தும், புறாக்களை பறக்க விட்டும் விளையாட்டு போட்டிகளை கொடியசைத்து தொடங்கி வைத்து, மாணவர்களுடன் விளையாடினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

முயற்சிதான் முக்கியம்

தமிழகத்தில் 11 அரசினர் குழந்தைகள் இல்லத்தை சேர்ந்த மாணவ -மாணவிகள் மற்றும் 14 அரசு சாரா குழந்தைகள் இல்லத்தைச் சேர்ந்த மாணவ -மாணவிகள் என 25 குழந்தைகள் இல்ல மாணவ- மாணவிகள் விளையாட்டு போட்டியில் பங்கேற்று இருக்கிறார்கள். தமிழக முதல்-அமைச்சர் விளையாட்டுத் துறைக்கு முக்கியத்துவம் கொடுத்து செஸ் போட்டியை நடத்தி சாதனை படைத்தார். இதனை பிரதமரே பாராட்டினார்.

தற்போது உதயநிதி ஸ்டாலின் விளையாட்டுத் துறை அமைச்சராக பொறுப்பேற்று விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறார். விளையாட்டில் வெற்றி முக்கியமில்லை. முயற்சி தான் முக்கியம். முயற்சி இருந்தால் வெற்றி நிச்சயம். மாணவ- மாணவிகள் இந்த விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்று பரிசுகளை பெற வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

544 பேர் பங்கேற்பு

இந்த விளையாட்டு போட்டிகளில் ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, சேலம், திருப்பத்தூர், தருமபுரி, கோவை, நீலகிரி, ஈரோடு ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 25 அரசினர் குழந்தைகள் இல்லங்களை சேர்ந்த 208 மாணவர்களும், 336 மாணவிகளும் என 544 மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

கைப்பந்து, ஓட்டப் பந்தயம், நீளம் தாண்டுதல் ஆகிய பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. விளையாட்டு போட்டி 2 நாட்கள் நடைபெறும்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் கண்ணன்ராதா, வேலூர் மாவட்ட குழந்தைகள் இல்ல பாதுகாப்பு அலுவலர் உமாமகேஸ்வரி, கண்காணிப்பாளர் செல்வா, நகரமன்ற உறுப்பினர்கள் வினோத், குமார், கிருஷ்ணன், பிரபு, உடற்கல்வி ஆசிரியர் பாலகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்