தென்மாவட்டங்களுக்கு 'வந்தே பாரத்' வருமா?

தென்மாவட்டங்களுக்கு ‘வந்தே பாரத்’ வருமா? என்பது குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Update: 2023-03-31 19:31 GMT

தபால் துறை, தொலைதொடர்பு துறை, ரெயில்வே துறை போன்ற அன்றாடம் நம்மோடு பயணிக்கும் துறைகள் எல்லாம் ஆங்கிலேயர்கள் உருவாக்கி போனது.

கடந்த 76 ஆண்டுகளில் அந்தத்துறைகளை நாம் எந்த அளவில் நவீனமயமாக்கி இருக்கிறோம் என்று பார்க்கும்போது வியப்பாக இருக்கிறது. குறிப்பாக ரெயில்வே துறையை எடுத்து கொண்டால் நீராவி என்ஜினில் ரெயிலை இயக்கி பிறகு டீசல், மின்சாரம் என வளர்ந்து தற்போது நடுத்தர வேகத்தில் செல்லும் வந்தே பாரத் ரெயில்கள், டிரைவர்களே இல்லாமல் இயங்கவிருக்கும் நவீன ரெயில் என்ற அளவிற்கு உயர்ந்து வருகிறோம். விரைவில் புல்லட் ரெயில்களும் இந்தியாவில் இயக்கும் நிலை ஏற்படும்.

வந்தே பாரத்

வந்தே பாரத் என்ற பெயரில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இந்த ரெயில் இந்திய நகரங்களுக்கு இடையே நடுத்தர வேகத்தில் செல்லும் திறன் கொண்டது. இந்தியாவில் முழுக்க முழுக்க உள்நாட்டில் தயாரிக்கும் ('மேக் இன் இந்தியா') திட்டத்தின் கீழான முன்னெடுப்பில், சென்னை பெரம்பூரில் உள்ள ரெயில்பெட்டி இணைப்புத் தொழிற்சாலையில் 18 மாத காலத்தில் தயாரிக்கப்பட்டது. இந்திய ரெயில்வே வரலாற்றில் இது ஒரு மைல்கல் ஆகும்.

1,148 இருக்கைகள் கொண்ட வந்தே பாரத் ரெயில்களில் 2 உயர் வகுப்பு பெட்டிகளும், 14 சாதாரண வகை பெட்டிகளும் உள்ளன. இவை அனைத்தும் குளிர்சாதன வசதி கொண்டவையாகும். இந்த ரெயிலில் என்ஜின் என்று தனியாக இருப்பதில்லை. டிரைவர்களுக்கு என்று ஒரு சிறிய அறை (கேபின்) மட்டுமே இருக்கும். ஒவ்வொரு பெட்டிகளுக்கு கீழேயும் என்ஜின் இருப்பதால் சீரான வேகம் அதிகரிப்பு, சீரான வேகம் குறைப்பு போன்றவை முறையாக நடைபெறும். இதனால் பெட்டிகளில் பயணம் செய்யும் போது அதிவேகத்தில் சென்றாலும் அதிர்வோ, குலுங்கலோ எதுவும் இல்லாமல் வீட்டில் இருப்பது போன்ற உணர்வை பயணத்தின் போது பயணிகள் உணரமுடியும். அதேநேரம் என்ஜின் டிரைவர் கேபினில் இருந்து கடைசி பெட்டியில் உள்ள ரெயில் கார்டு அறை வரை பயணிகள் செல்ல முடிகிறது.

சென்னை-கோவை

சென்னை-மைசூரு இடையே இந்த ரெயில் ஓடிக்கொண்டு இருக்கும் நிலையில் கோவை-சென்னை இடையே வருகிற 8-ந்தேதி வந்தே பாரத் ரெயில் சேவையை பிரதமர் நரேந்திரமோடி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் தென் மாவட்டங்களுக்கு குறிப்பாக சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு வந்தே பாரத் ரெயிலை இயக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து இருக்கிறது. இதுபற்றி பல்வேறு தரப்பினர் வெளியிட்டிருக்கும் கருத்துகள் வருமாறு:-

உரிய நடவடிக்கை

மதுரை ரெயில்வே கோட்ட ஆலோசனை குழு உறுப்பினர் இரா.பாண்டியராஜா கூறும் போது, 'சென்னை எழும்பூரில் இருந்து கன்னியாகுமரிக்கு வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட்டால்தான் பெரும்பாலான மக்கள் பயன் அடைவார்கள். தெற்கு ரெயில்வே நிர்வாகம் ஆண்டுதோறும் தென் மாவட்டங்களை இணைக்கும் வகையில் ரெயில்களை விட வேண்டும் என்று ஆர்வம் காண்பிப்பார்கள்.

ஆனால் ரெயில்களை விடுவதில்லை. தற்போது சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை ரெயில் பாதை மின்மயமாக்கப்பட்டு தயார் நிலையில் இருப்பதால் இந்தப்பாதையில் வந்தே பாரத் ரெயிலை இயக்க வேண்டும். தென் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பலர் வேலை, கல்வி, தொழில் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக சென்னையில் வசிக்கின்றனர். எனவே அனைவருடைய நலன் கருதி சென்னை- கன்னியாகுமரி இடையே வந்தே பாரத் விரைவு ரெயிலை இயக்க ரெயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'.

விருதுநகரில் நிற்க வேண்டும்

அருப்புக்கோட்டை வக்கீல் கணேசன்:-

மத்திய ெரயில்வே அமைச்சகம் தென் மாவட்டங்களுக்கு சென்னை மற்றும் பெங்களூருவில் இருந்து வந்தே பாரத் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிலும் குறிப்பாக சென்னையில் இருந்து நெல்லைக்கு வந்தே பாரத் ெரயில் இயக்க வேண்டும். இந்த ெரயில் சென்னை, திருச்சி, மதுரை, விருதுநகர் உள்ளிட்ட ெரயில் நிலையங்களில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதிலும் குறிப்பாக விருதுநகர் ெரயில் நிலையத்தில் இந்த ெரயில் நின்று சென்றால்தான் விருதுநகர் மாவட்டத்தின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதியில் உள்ள மக்கள் இந்த ெரயிலை பயன்படுத்த வாய்ப்பு ஏற்படும். எனவே தென்னக ெரயில்வே நிர்வாகம் இதற்கான நடவடிக்கையை விரைந்து எடுக்க வேண்டும்.

அறிவிப்புடன் நடவடிக்கை

ஐ.டி. நிறுவன ஊழியர் அலமு:-

தற்போதைய நிலையில் சென்னையில் இருந்து மதுரை வரையில் குறைந்த கால அவகாசத்தில் வருவதற்கு தேஜஸ் ெரயில் இயக்கப்படுகிறது. எனினும் தென் மாவட்டங்களுக்கு அதிவிரைவு ெரயில் எதுவும் இயக்கப்படுவதில்லை. அதிலும் தென்னக ெரயில்வே நிர்வாகம் தென் மாவட்டங்களுக்கு அறிவிக்கப்பட்ட பல ெரயில்களை இயக்காத நிலை நீடிக்கிறது.

இந்தநிலையில் தென் மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் சென்னையில் இருந்து நெல்லைக்கு வந்தே பாரத் ெரயில் இயக்கப்பட வேண்டும். இந்த ெரயில் மதுரையை அடுத்து விருதுநகரில் நின்று செல்ல நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் விருதுநகர் மாவட்ட மக்கள் முழுவதும் பயன்பெற வாய்ப்பு ஏற்படும். எனவே மத்திய ெரயில்வே அமைச்சகம் தமிழகத்திற்கு அடுத்து ஒதுக்கீடு செய்யப்படும் வந்தே பாரத் ெரயிலை சென்னையில் இருந்து நெல்லைக்கு இயக்க ஏற்பாடு செய்ய வேண்டியது அவசியமாகும். வழக்கம்போல் அறிவிப்பு செய்து விட்டு அடுத்து அதைப்பற்றி சிந்திக்காமல் விட்டுவிடக்கூடாது அறிவிப்போடு சேர்ந்து நடவடிக்கையும் தொடர வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

அனைத்தும் மாறும்

பெரம்பூர் ரெயில் பெட்டி தொழிற்சாலை அதிகாரிகள் கூறும் போது, 'நவீன வசதிகள் கொண்ட வந்தே பாரத் பெயர் கொண்ட 16 பெட்டிகளுடன் ஒரு ரெயில் தயாரிக்க ரூ.110 கோடி செலவாகிறது. தொடர்ந்து தயாரிக்கும் போது, தயாரிப்புச் செலவுகள் இன்னும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐரோப்பாவில் இருந்து இறக்குமதி செய்வதைவிட இந்தியாவில் தயாரித்தால் 40 சதவீதம் விலை குறைவாகும். வரும் காலங்களில் இந்தியாவில் ஓடும் அனைத்து ரெயில்களும் வந்தே பாரத் ரெயில்களாக மாற்றப்படும்.

குறிப்பாக பெருநகரங்களுக்கு இடையே ஓடும் சதாப்தி மற்றும் நீண்ட தூரம் செல்லும் ராஜ்தானி ஆகிய ரெயில்களும் வந்தே பாரத் ரெயில்களாக மாற்றும் திட்டமும் உள்ளது. தற்போது வந்தே பாரத் ரெயில்களில் இருக்கைகள் மட்டுமே இருக்கின்றன. வரும் காலங்களில் படுக்கை வசதியும் செய்து தரப்பட உள்ளது' என்று அதிகாரிகள் கூறினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்