லெட்சுமாங்குடி சாலையில் வேகத்தடை அமைக்கப்படுமா?
லெட்சுமாங்குடி சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;
லெட்சுமாங்குடி சாலை
கூத்தாநல்லூர் அருகே உள்ள லெட்சுமாங்குடி சாலை திருவாரூர், மன்னார்குடி, திருச்சி, தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம், நாகூர், காரைக்கால், கும்பகோணம், மயிலாடுதுறை போன்ற நகர பகுதிகளை இணைக்கும் முக்கிய சாலையாகும். அதனால் அரசு மற்றும் தனியார் பஸ்கள், பள்ளி கல்லூரி வாகனங்கள், கார், வேன், ஆட்டோ, லாரி, டிராக்டர், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கனரக வாகனங்கள் என தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் இந்த சாலையில் சென்று வருகின்றன.
மக்கள் அதிகம் நடமாடும் இடம்
லெட்சுமாங்குடி சாலையில் உத்திராபதீஸ்வரர் கோவில் எதிரே சாலையில் மக்கள் அதிகம் நடமாடும் இடமாக இருந்து வருகிறது. மேலும் அருகில் மரக்கடை, பஸ் நிறுத்தம் உள்ளதால் மக்கள் அதிகம் கூடும் இடமாகவும் இருந்து வருகிறது. அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், கடைவீதி மற்றும் அரசு மருத்துவமனை, தாசில்தார் அலுவலகம், வழிபாட்டு தலங்கள் சென்று வருவோர் இந்த சாலை வழியாகவே சென்று வருகின்றனர்.
அதனால் உத்திராபதீஸ்வரர் கோவில் அருகே சாலையில் வாகனங்கள் வேகமாக சென்று வருகின்றன.
வேகத்தடை அமைக்க வேண்டும்
இதனால் கடைவீதி, பஸ் நிறுத்தம் மற்றும் சாலையில் சென்று வருவோர் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் சாலையை கடந்து மறுமுனைக்கு சென்று வரவும் அச்சம் அடைகின்றனர். எனவே உத்திராபதீஸ்வரர் கோவில் எதிரே சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள், வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.