உயர்கோபுர மின்விளக்கு அமைக்கப்படுமா?

உயர்கோபுர மின்விளக்கு அமைக்கப்படுமா?;

Update:2023-06-27 00:15 IST

கூத்தாநல்லூர் பாய்க்காரத்தெரு பாலம் எதிரே உயர்கோபுர மின்விளக்கு அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

3 பிரிவு சாலைகள்

கூத்தாநல்லூரில் உள்ள பாய்க்காரத்தெரு பாலத்தை மையமாக கொண்டு லெட்சுமாங்குடி சாலை, வடபாதிமங்கலம் சாலை, பாய்க்காரத்தெரு சாலை என 3 பிரிவு சாலைகள் உள்ளன. இந்த 3 பிரிவு சாலை அமைந்துள்ள இடமானது எப்போதும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியாக இருந்து வருகிறது.

குறிப்பாக அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரி, கடைவீதி, பஸ் நிறுத்தம் மற்றும் ஏனைய இடங்களுக்கு இந்த 3 பிரிவு சாலை வழியாக தான் அந்த பகுதி மக்கள் தினமும் சென்று வருகின்றனர். பாய்க்காரத்தெரு பாலம் அமைந்துள்ள இடம் மக்கள் அதிகளவில் கூடும் இடம் என்றாலும், மாலை 6 மணி நெருங்கி விட்டாலே இருள்சூழ்ந்து காணப்படுகிறது.

உயர்கோபுர மின்விளக்கு அமைக்க வேண்டும்

இதனால் இரவு நேரங்களில் பாய்க்காரத்தெரு பாலம் மது அருந்துபவர்களின் கூடாரமாக விளங்குகிறது. மேலும் சமூக விரோதிகள் மற்றும் வழிப்பறி கொள்ளையர்கள் சிலர் கூடும் இடமாகவும் திகழ்கிறது. அதனால் இரவு நேரங்களில் பாய்க்காரத்தெரு பாலத்தை கடந்து சென்று வருவதற்கு போதிய மின்விளக்கு வெளிச்சமும் இல்லாமல் உள்ளது. இதனால் பெண்கள் மற்றும் பள்ளி மாணவ- மாணவிகள் மிகுந்த அச்சத்துடனேயே சென்று வருகின்றனர்.

எனவே சமூக விரோத செயல்பாடுகளை தடுக்கவும், மக்கள் அச்சமின்றி சென்று வருவதற்கு ஏதுவாக பாய்க்காரத்தெரு பாலம் எதிரே உயர் கோபுர மின்விளக்கு அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்