நெல்லை-தென்காசி வழித்தடத்தில் பழையபேட்டையில் சர்வீஸ் சாலை அகலப்படுத்தப்படுமா?

நெல்லை-தென்காசி வழித்தடத்தில் பழையபேட்டையில் சர்வீஸ் சாலை அகலப்படுத்தப்படுமா? என்று பயணிகள் எதிர்பார்த்து உள்ளனர்.

Update: 2023-07-27 18:45 GMT

நெல்லை -தென்காசி இடையே இரு வழிச்சாலையை 4 வழிச்சாலையாக மேம்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியை இந்த ஆண்டு இறுதிக்குள் முடிக்கும் வகையில் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதையொட்டி பழையபேட்டை கண்டியப்பேரில் உள்ள கால்வாய் பாலத்தை அகலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அந்த பாலத்தை இடித்து விட்டு, புதிய அகலமான பாலம் கட்டுவதற்கு ஏற்பாடு செய்தனர். அதன்படி கடந்த 10 நாட்களுக்கு முன்பு பாலம் இடிக்கப்பட்டு, பள்ளம் தோண்டப்பட்டு உள்ளது. விரைவில் கட்டுமான பணிகள் தொடங்குகிறது.

பஸ் போக்குவரத்து

இதன் அருகில் வாகனங்கள் கடந்து செல்வதற்காக சர்வீஸ் ரோடு அமைக்கப்பட்டு உள்ளது. ஆனால் இந்த சர்வீஸ் ரோட்டில் மோட்டார் சைக்கிள், ஆட்டோ, கார் போன்ற இலகு ரக வாகனங்கள் மட்டும் செல்ல அனுமதிக்கப்படுகிறது.

நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து தென்காசி செல்லும் பஸ்கள் டவுன் காட்சி மண்டபத்தை கடந்து கோடீஸ்வரன் நகர், புதுப்பேட்டை, ம.தி.தா. இந்து கல்லூரி, திருப்பணிகரிசல்குளம் முக்கு வழியாக பழைய பேட்டை- தென்காசி மெயின் ரோட்டுக்கு செல்கிறது.

மறுமார்க்கத்தில் தென்காசியில் இருந்து நெல்லைக்கு வரும் பஸ்கள் பழையபேட்டை மின் நிலையம், பேட்டை ரொட்டிக்கடை முக்கு, கோடீஸ்வரன் நகர், காட்சி மண்டபம், வழுக்கோடை வழியாக நெல்லையை வந்தடைகிறது.

நேரம், பணம் விரயம்

இதனால் நெல்லையில் இருந்து தென்காசி செல்வதற்கான பயண தூரம் 30 நிமிடங்கள் முதல் 45 நிமிடங்கள் வரை கூடுதலாகிறது. மறுமார்க்கத்தில் நெல்லைக்கு வரும் போது 15 நிமிடங்கள் முதல் 30 நிமிடங்கள் வரை கூடுதல் நேரம் எடுத்துக் கொள்கிறது.

இதனால் தென்காசி, பாவூர்சத்திரம், அடைக்கலப்பட்டணம், ஆலங்குளம் பகுதியில் இருந்து நெல்லைக்கு பணி நிமித்தமாகவும், பள்ளி, கல்லூரிகளுக்கும் வருவோர் கடும் அவதிப்படுகிறார்கள். குறித்த நேரத்துக்குள் நெல்லைக்கு வந்து சேர முடியாமல் சிரமப்படுகிறார்கள்.

மேலும் பேட்டையை சுற்றி பஸ்கள் செல்வதால், பயணிகளிடம் இருந்து கூடுதலாக ரூ.2 முதல் ரூ.3 வரை கட்டணமும் வசூலிக்கப்படுகிறது.

அகலமான சர்வீஸ் ரோடு

இந்த பாலம் கட்டுமான பணி முடிப்பதற்கு எப்படியும் 6 மாத காலம் ஆகி விடும் என்பதால், பாலத்தில் அருகே அமைத்துள்ள சர்வீஸ் ரோட்டை அகலமாக்க வேண்டும். இந்த சர்வீஸ் ரோட்டில் இருமார்க்கத்திலும் பஸ் உள்ளிட்ட கனரக வாகனங்களும் செல்வதற்கு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.

மேலும் கண்டியப்பேரி இசக்கி அம்மன் கோவிலில் இருந்து வழுக்கோடை, தொண்டர் சன்னதி வழியாக வாகனங்கள் செல்லும் போது ஏற்படும் போக்குவரத்து நெருக்கடியை நிரந்தரமாக தீர்க்கும் வகையில், கண்டியப்பேரி இசக்கி அம்மன் கோவிலில் இருந்து பாறையடி பகுதிக்கு நேரடி இணைப்பு சாலை அமைக்க வேண்டும். அப்படி செய்தால் பழைய பேட்டை கண்டியப்பேரியில் இருந்து வாகனங்கள் இந்த இணைப்பு சாலை வழியாக பாறையடிக்கு சென்று நயினார்குளம் கரை ரோட்டில் பயணித்து டவுன் ஆர்ச் வழியாக சந்திப்பு நோக்கி எளிதாக பயணிக்க முடியும். எனவே இணைப்பு சாலை அமைக்கவும் நெடுஞ்சாலைத்துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags:    

மேலும் செய்திகள்