குண்டும், குழியுமான சாலை சீரமைக்கப்படுமா?

தொக்காளிக்காடு ஊராட்சியில் குண்டும், குழியுமாக காணப்படும் சாலை சீரமைக்கப்படுமா? என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்

Update: 2023-08-11 19:54 GMT

கரம்பயம்:

தொக்காளிக்காடு ஊராட்சியில் குண்டும், குழியுமாக காணப்படும் சாலை சீரமைக்கப்படுமா? என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.

குண்டும், குழியுமான சாலை

பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தொக்காளிகாடு ஊராட்சியில் கீழக்காடு பகுதி முத்துமாரியம்மன் கோவில் தெருவில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் வசிப்பவர்கள் அனைவருமே கூலி தொழிலாளர்கள். இந்த பகுதியில் முறையான சாலை வசதி இல்லை. 15 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட தார்ச்சாலை தற்போது சேதமடைந்து காணப்படுகிறது. இந்த சாலையில் ஜல்லி கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது.

கால்களை பதம் பார்க்கும் ஜல்லிகற்கள்

இந்த சாலை வழியாக நடந்து வருபவர்கள் கால்களை ஜல்லி கற்கள் பதம் பார்க்கின்றன. மேலும் இந்த வழியாக செல்லும் சைக்கிள், மோட்டார் சைக்கிள், ஆட்டோ போன்ற வாகனங்களின் டயர்கள் பஞ்சராகி விடுகின்றன.

சாலை சேதமடைந்துள்ளதால் இறந்தவர்களின் உடலை வாகனத்தில் கொண்டு செல்ல முடியாத நிலை உள்ளதால் உறவினர்கள் தங்களது தோளில் சுமந்து சென்று வருகின்றனர்.

சீரமைக்க வேண்டும்

திருமண மற்றும் சுப காரியங்களில் கூட மணமக்களை வாகனங்களில் அழைத்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படும் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்