பிளாஸ்டிக் கழிவுகளை விலைக்கு வாங்கும் திட்டம் அனைத்து ஊராட்சிகளிலும் செயல்படுத்தப்படுமா?

பெரம்பலூர் மாவட்டத்தில் பிளாஸ்டிக் கழிவுகளை விலைக்கு வாங்கும் திட்டம் அனைத்து ஊராட்சிகளிலும் செயல்படுத்தப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Update: 2023-01-23 19:45 GMT

அதிர்ச்சி தகவல்

உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் நெகிழி என்னும் பிளாஸ்டிக், கடல், காற்று, நிலம், நீர், கடல்வாழ் உயிரினங்கள், நாம் உண்ணும் உணவுகள், நீர்நிலைகள் என அனைத்தையும் பாதித்து கொண்டு இருக்கிறது. இந்நிலையில் சமீபத்திய ஆய்வு முடிவுகளின் மூலம் மனித உடலில் உள்ள ரத்தம், தாய் குழந்தைக்கு கொடுக்கும் தாயப்பால் உள்ளிட்டவைகளிலும் பிளாஸ்டிக் நுண்துகள்கள் கலந்து உள்ளது என தெரிய வந்துள்ளது. ஏற்கனவே தாய்க்கும் வயிற்றில் உள்ள சேய்க்குமான இணைப்பாக விளங்கும் (பிளாசெண்டா) தொப்புள் கொடியிலும் பிளாஸ்டிக் துகள்கள் இருந்ததை ஆய்வு முடிவுகள் வெளிப்படுத்தியது இதை அறிந்த உலகமே அதிர்ச்சியில் ஆழந்தது.

இப்படி நாள்தோறும் புதுப்புது பாதிப்புகள் அறியப்பட்டு வரும் வேளையில் இந்த பிரச்சினை தொடர்பாக அனைத்து நாடுகளும் ஆக்கபூர்வமாக செயலாற்ற வேண்டியது கட்டாயம் என்ற நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளோம். பிளாஸ்டிக் ஸ்டிராக்கள், பிளாஸ்டிக் பாட்டில்கள், பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் சோடா பாட்டில்கள், தட்டு, கப், உணவுப் பொட்டலங்கள், பிளாஸ்டிக் குச்சிகளைக் கொண்ட காது குடையும் குச்சிகள், சிகரெட் வடிகட்டிகள் போன்றவை நாம் அன்றாடம் உபயோகித்துத் தூக்கி எறியக்கூடியவை.

"மீண்டும் மஞ்சப்பை இயக்கம்"

இந்நிலையில் உலகம் முழுதும் ஆங்காங்கே பிளாஸ்டிக் மாசைக் கட்டுப்படுத்தும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி முதல் தமிழ்நாட்டில் ஒரு முறை பயன்படுத்தப்படும் உணவு பொருட்கள் வைக்கப்படும் பிளாஸ்டிக் உறை, மேஜை மீது விரிக்கப்படும் பிளாஸ்டிக் விரிப்பு, தெர்மாகோல் தட்டுகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட காகித தட்டுகள் உள்பட 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்படுவதாக அரசு அறிவித்தது. தடை அறிவிக்கப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் சில காலம் அது நடைமுறைப்படுத்தப்பட்டாலும் தொடர்ந்து விரைவிலேயே மீண்டும் தாரளமாய் புழங்கத் தொடங்கின. இந்நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு தமிழ்நாடு அரசு "மீண்டும் மஞ்சப்பை இயக்கம்" என்றதொரு இயக்கத்தினை ஆரம்பித்தது. அதே ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் மத்திய அரசும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களில் சிலவற்றுக்கு தடை அறிவித்தது.

"நெகிழி மீள வாங்கும் கொள்கை"

தமிழ்நாடு அரசு தனது மீண்டும் மஞ்சப்பை இயக்கத்தின் வாயிலாக பிளாஸ்டிக்பைகளைத் தவிர்த்து துணிப்பைகள் உள்ளிட்ட மாற்றுகளை கையில் எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக கடந்த 2022-ம் ஆண்டு மே மாதம் 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் "நெகிழி மீள வாங்கும் கொள்கை" என்ற ஒரு திட்டம் அறிமுகப்படுத்தப்படுவதாக ஒரு விவாதப்பொருள் ஊரக வளர்ச்சித்துறை சார்பாக வைக்கப்பட்டு அனைத்து ஊராட்சிகளிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

அதன்படி பிளாஸ்டிக் குப்பைகளை ஊராட்சியிடம் கொடுத்து அதற்கு ஈடாக உரிய தொகையை பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அந்த திட்டம் தொடர்பாக முறையான அறிவிப்புகள் வழங்கப்படாததோடு பல ஊராட்சிகளிலும் செயல்படுத்தப்படவில்லை என்றும் கூறுகின்றனர். மேலும், எந்தெந்த வகையான பிளாஸ்டிக் குப்பைக்கு என்ன விலை கொடுக்கப்படும், குப்பைகளை எப்போது யாரிடம் கொடுக்க வேண்டும்? என்பவை போன்ற தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இது தொடர்பாக அடுத்து நடந்த கிராம சபைக் கூட்டங்களிலும் எதுவும் அறிவிக்கப்படவில்லை. இந்தத் திட்டம் முறையாக செயல்படுத்தப்பட்டால் குறைந்தபட்சம் பிளாஸ்டிக் குப்பைகள் கண்ட இடங்களில் கொட்டப்படுவதாவது தடுக்கப்படும். இதனால் நீர்நிலைகள், வயல்கள் உள்ளிட்டவைகளும் பாதுகாக்கப்படும். எனவே பிளாஸ்டிக் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி அந்தந்த ஊராட்சிகளில் பிளாஸ்டிக் கழிவுகளை பெற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

அலுவலருக்கே தகவல் தெரியவில்லை

பேரளி சூழலியல் செயற்பாட்டாளர் ராகவன்:- கடந்த ஆண்டு மே மாதம் 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் நம் தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்ககத்தின் சார்பில் "நெகிழி மீள வாங்கும் கொள்கை" என்ற தலைப்பில் ஒரு விவாதப் பொருள் வைக்கப்பட்டிருந்தது. அதில் தமிழ்நாடு அரசின் "மீண்டும் மஞ்சப்பை" முன்னெடுப்பின் ஒரு பகுதியாக, பொதுமக்களிடமிருந்து நெகிழிப் பொருட்களை மீள வாங்கும் கொள்கையினை அறிமுகப்படுத்தப்படுகிறது. எனவே நெகிழிப் பொருட்களை ஊராட்சியிடம் ஒப்படைத்து உரிய தொகையை பெற்றுக் கொள்ளலாம் என்றும் இருந்தது.

இது தொடர்பாக பேரளியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் விளக்கம் கேட்டபோது உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் ஒன்றிய அலுவலகத்தில் இருந்து வந்திருந்த அலுவலர், இந்த கொள்கை தொடர்பான தகவல்கள் ஏதும் எங்களுக்கே இன்னும் சரிவர தெரியவில்லை என்ற பதிலைக் கூறினர். கிராமங்களின் அடிநாதமான கிராம சபைக் கூட்டத்தில் வைக்கப்படும் விவாதப் பொருள் பற்றிய தகவல் உள்ளாட்சி பிரதிநிகள், அலுவலருக்கே தெரியாதபோது கூட்டத்திற்கு வரும் மக்களுக்கு அவர்கள் எப்படி விழிப்புணர்வை ஏற்படுத்துவார்கள்.

ஆய்வு செய்து உறுதிப்படுத்த வேண்டும்

எப்படி திட்டத்தை விளக்குவார்கள். மேலும் அதற்கு பின்னர் நடைபெற்ற கிராம சபைக் கூட்டங்களில் இது தொடர்பாக எந்த அறிவிப்பும் இல்லை. இந்த திட்டம் தொடர்பாக, பள்ளி மாணவர்களைக் கொண்டு கூடுதல் விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு எந்தெந்த குப்பைகளை கொடுக்கலாம், யாரிடம் கொடுக்கலாம், ஒரு கிலோவிற்கு எவ்வளவு வழங்கப்படும் உள்ளிட்ட தகவல்களையும் வழங்கலாம். அதோடு, அனைத்து கிராம சபைக் கூட்டங்களிலும் இது தொடர்பான விவாதத்தை மேற்கொள்ள வேண்டும். நல்ல நோக்கத்தில் ஒரு திட்டத்தை அறிவிக்கும் மாவட்ட நிர்வாகமும், அரசு அலுவலர்களும் கடைக்கோடியில் அந்த திட்டங்கள் முறையாக செயல்படுத்தப்படுகிறதா? என்பதையும் ஆய்வு செய்து உறுதிப்படுத்த வேண்டும். கிராம சபைக் கூட்டத்தில் வைக்கப்படும் விவாதப் பொருட்களை முறையாக விவாதித்து தீர்மானங்கள் நிறைவேற்றுவதை உறுதிப்படுத்த வேண்டும்.

கட்டுப்படுத்த முடியாது

நொச்சியத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் சிவக்குமார்:- பிளாஸ்டிக் தொடர்பான மத்திய மாநில அரசுகளின் முயற்சிகளை குறிப்பாக மீண்டும் மஞ்சப்பை இயக்கத்தின் முன்னெடுப்புகளை வரவேற்கிறோம். அதே வேளையில், இந்த முன்னெடுப்புகள் இன்னும் ஆக்கப்பூர்வமான செயல்களுடன் நகர வேண்டும். ஏனெனில், பிளாஸ்டிக் பொருட்கள் குப்பைகளாக மாறி சூழலைப் பாதிப்பது மட்டுமின்றி, அவை உற்பத்தி செய்யப்படும் போதும், பயன்படுத்தப்படும் போதும் கூட அதைக் கையாள்பவர்களுக்கும் சூழலுக்கும் தீவிரமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றன. பிளாஸ்டிக் குப்பைகளை அழிப்பதைவிட அவற்றை உற்பத்தியிலேயே கட்டுப்படுத்துவதுதான் பாதுகாப்பான தீர்வு.

குறிப்பாக பிஸ்கெட்டுகள், மிட்டாய்கள் போன்ற பொட்டலங்களில் பயன்படுத்தப்படும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மறுசுழற்சி செய்ய முடியாததாக இருப்பதால் அவற்றைத் தடை செய்யாமல் முழுமையாக நாம் பிளாஸ்டிக் மாசை கட்டுப்படுத்த முடியாது. ஆகவே அரசு குப்பைகளைக் கையாள்வதில் மட்டுமின்றி அவற்றை உற்பத்தியிலேயே கட்டுப்படுத்தவும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். பிளாஸ்டிக் நச்சுப் பொருட்கள் நம் உணவுச்சங்கிலியில் கலப்பதை நாம் உடனடியாகத் தடுப்பது தான் நம் எதிர்காலத்தை பாதுகாப்பானதாக்கும். விதிகளை கடுமையாக்குதல், தடை செய்யப்பட்ட பொருட்கள் மீண்டும் உற்பத்தியாகாமல் தடுத்தல், மாற்றுப் பொருட்கள் உற்பத்தியை ஊக்குவித்தல், மகளிர் சுய உதவிக்குழுக்களை ஈடுபடுத்துதல் உள்ளிட்டவைகளை முன்னெடுத்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

பாதிப்புகளை ஏற்படுத்துவது குறையும்

அனுக்கூரை சேர்ந்த இளையராஜா:- நெகிழி மீள வாங்கும் கொள்கை என்ற ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டதே இங்கு பலருக்கும் தெரியாது. குப்பைகளைப் பற்றிய புரிதல் இல்லாத காரணத்தினால் மக்கும், மக்காத குப்பைகள் என பிரித்துக் கொடுப்பதை பலரும் பின்பற்றுவதில்லை. குப்பைகளை சேர்த்துக் கொட்டுவதினால் அதை பிரிப்பதில் தூய்மைக் காவலர்கள் மிகவும் சிரமப்படுவதை பார்க்க முடிகிறது. இந்த கொள்கையை அனைத்து ஊராட்சிகளிலும் முறையாக அமல்படுத்தினால் மக்காத பிளாஸ்டிக் குப்பைகளை அனைவரும் கொண்டு வந்து ஊராட்சியில் கொடுப்பதற்கு வாய்ப்பாக அமையும்.

இதனால் குப்பைகளை சேர்த்துக் கொட்டுவது தவிர்க்கப்படுவதோடு பிளாஸ்டிக் குப்பைகள் நீர்நிலைகள், வயல்கள், காடுகள், சாலையோரங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கண்டபடி குப்பைகள் பரவிக் கிடந்து பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துவது குறையும். தூய்மைக் காவலர்களின் நலனும் காக்கப்படும். மேலும் திடக்கழிவு மேலாண்மை உள்ளிட்ட திட்டங்களை ஆக்கபூர்வமாக செயல்படுத்தி மக்கும் குப்பைகளை உரமாக மாற்றி உழவர்களுக்கு விற்பனை செய்தால் உழவர்களுக்கு உரமும், ஊராட்சிக்கு வருவாயும் கிடைக்கும். இந்த வருவாயை பல்வேறு சிரமங்களுடன் பணி செய்யும் தூய்மைக் காவலர்களுக்கு வழங்கினால் அவர்களுடைய வாழ்வாதாரம் மேம்பட உதவியாக இருக்கும்.

குப்பைகளை கையாள்வதில் பெரிய சிக்கல்

பீல்வாடியை சேர்ந்த ரேணுகா:- பிளாஸ்டிக் பயன்பாடு புழக்கத்தில் பரவ ஆரம்பித்த எனது சிறுவயதுக் காலங்களில், ஊரில் எங்கேனும் பிளாஸ்டிக் குப்பைகள் இருந்து அதை சேகரித்துக் கொடுத்தால் அதற்கு பதிலாக இனிப்புகள், கிழங்குகள் உள்ளிட்டவைகளை வியாபாரிகள் வழங்கியது நினைவிற்கு வருகிறது. இந்த நெகிழி மீள வாங்கும் கொள்கை தொடர்பான கிராமசபைக் கூட்ட விவாதப் பொருளை கண்டவுடன் சிறுவயது நினைவுகள் வந்து செல்கிறது. ஆனால் அதன் பிறகு விழிப்புணர்வு கூட இல்லை. மேலும் குப்பைகள் பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தினாலும், தூய்மைக் காவலர்களுக்கான போதிய உபகரணங்கள், மண்புழு உரம் தயாரிக்கும் வசதிகள் பெரும்பாலான இடங்களில் இல்லாத காரணத்தினாலும் குப்பைகளை கையாள்வது பெரிய சிக்கலாக உள்ளது.

இதில் அனைவரும் பாதிக்கப்பட்டாலும் அதிகளவு தூய்மைக் காவலர்களே பாதிக்கப்படுகின்றனர். அதோடு குப்பைகள் வாழ்வாதாரமாக விளங்கும் நீர்நிலைகளில் கொட்டப்படுவதோடு நீண்ட நாட்களாக அள்ளப்படாத பிளாஷ்டிக் குப்பைகள் நாளடைவில் நுண்துகள்களாக உடைந்து காற்றில் கலந்து பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்த பிளாஷ்டிக் குப்பைகள் நீர்நிலைகள், கால்நடைகள், வயல்கள், நிலத்தடி நீர்மட்டம் என பலவற்றையும் பாதிக்கிறது. மக்காக் குப்பைகளை திரும்பப் பெற்றால் குறைந்தபட்ச அளவிலான குப்பைகளையாவது திரும்பப் பெறலாம். இதை முறையாக அனைத்து ஊராட்சிகளிலும் செயல்படுத்துவதோடு தூய்மைக் காவலர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவும் நம் மாவட்ட நிர்வாகம் முயற்சிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்