புதிய சாலைகளின் ஆயுள் அதிகரிக்குமா...?

புதிய சாலைகளின் ஆயுள் அதிகரிக்குமா...?

Update: 2023-03-29 18:45 GMT

கோவை

கோவை மாநகராட்சியில் 100 வார்டுகள் உள்ளன. இதில் 2,618 கிலோ மீட்டர் நீளத்துக்கு மாநகராட்சி சாலைகள் உள்ளன. இதில் 114 கிலோ மீட்டர் நீளத்துக்கு இன்னும் மண் சாலைகள் உள்ளன. மாநகராட்சி பகுதியில் சூயஸ் திட்டத்துக்கு குழாய்கள் அமைக்க தோண்டுவது, பாதாள சாக்கடைக்காக தோண்டுவது, சாக்கடை குழாய், குடிநீர் குழாய் பழுதானால் தோண்டுவது போன்ற பல்வேறு காரணங்களால் நகர சாலைகள் குண்டும், குழியுமாகவே மாறி உள்ளன.

இந்த நிலையில் கோவை மாநகராட்சி பகுதியில் உள்ள சாலைகளை செப்பனிட தமிழக அரசு ரூ.200 கோடி நிதி ஒதுக்கியது. இதைத்தொடர்ந்து நகரில் பல்வேறு இடங்களில் புதிய சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

தரம் உள்ளதா?

தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை பகுதிகளில் புதிதாக சாலை அமைக்கும்போது பாலம் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக ஒரு கிலோ மீட்டர் சாலைக்கு கூடுதலாக விலை நிர்ணயிக்கப்படுகிறது. ஆனால் மாநகராட்சியில் ஒரு கிலோ மீட்டர் சாலை அமைக்க தற்போது ரூ.1 கோடி வரை விலை நிர்ணயிக்கப்படுகிறது. இதன் அடிப்படையில் டெண்டர் விடப்படுகிறது. 10 மீட்டர் சாலை அமைக்க வேண்டுமானால் ரூ.1 லட்சம் செலவிடப்படுகிறது. இந்த நிலையில் சாலைகள் அமைக்கப்பட்டாலும் அவைகள் தரமாக உள்ளதா என்பதில் தான் பிரச்சினையாக உள்ளது.

இதனால் மாநகராட்சி பகுதிகளில் அமைக்கப்படும் சாலை பணிகளை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் அடிக்கடி ஆய்வு செய்து, குறைகளை சுட்டி காண்பித்து வருகிறார். இதில் கோவை புட்டுவிக்கி சாலை பல கிலோ மீட்டர் நீளத்துக்கு குண்டும், குழியுமாக உள்ளது. ஆனால் 250 மீட்டர் நீளத்துக்கு மட்டுமே தார்சாலை அமைக்க ரூ.22 லட்சத்து 50 ஆயிரம் ஒதுக்கப்பட்டு, தற்போது பணிகள் நடந்து வருகிறது. அதில் ஜல்லி கற்கள் கொட்டப்பட்ட நிலையில் புழுதி பறக்கிறது. இன்னும் தார்சாலையாக மாற்றப்படாத நிலை காணப்படுகிறது. அதற்குள் அந்த சாலையோர சாக்கடை குழாயில் உடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் பொட்டுகிட்டு பாய்ந்தபடி உள்ளது. இந்த கழிவு நீர் ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டு புதிய சாலையில் பொங்கி வழிகிறது.

ஆய்வு

இந்த புதிய சாலை அமைக்கும்போதே வடிகால் குழாய் உடைந்துள்ளதா, அடைப்பு உள்ளதா என்று கவனிக்காமலே இந்த சாலை போடுவதற்கு பணிகள் நடந்துள்ளது. இதுபோன்று நகரில் பல இடங்களில் இந்த பிரச்சினை உள்ளது. இதுதவிர புதிதாக சாலைபோட்ட ஒரு சில மாதங்களுக்குள் பழுதான குழாய், சாக்கடை வடிகால் உள்ளிட்ட பணிக்காக தோண்டும் நிலையும் உள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, புதிதாக சாலைகள் அமைக்கும் இடத்தில் முழுமையாக போடப்பட வேண்டும்.

அந்த சாலைகளில் தரம் கடைபிடிக்கப்பட வேண்டும், பாதாள சாக்கடை குழாய் பதிக்கப்பட்ட பகுதிகளில் விடுபடாமல் சாலைகள் புதிதாக போடப்பட வேண்டும், தார்சாலை அமைக்கும் போது மாநகராட்சி வரிப்பணம் விரையம் ஆகாமல் தடுக்க வேண்டும். புதிய சாலைப்பணி முழுமையாக முடிக்கப்படும் முன்பே, கழிவுநீர் பெருக்கெடுத்து அந்த சாலை குண்டு, குழியுமாக பள்ளமாகி விடும் நிலை உள்ளது. ஆகவே புதிய சாலைகளின் ஆயுள் அதிகரிக்குமா...?தரத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்பது கோரிக்கையாக உள்ளது என்றனர்.மாநகராட்சி தொழில்நுட்ப பிரிவு அதிகாரிகள் கூறும்போது, மாநகராட்சி சாலைகளில் முறையான தரம் கடைபிடிக்கப்படுகிறது. புகார் வரும் பகுதிகளில் ஆய்வு செய்யப்படுகிறது என்று தெரிவித்தனர்.



Tags:    

மேலும் செய்திகள்