விழுப்புரத்தில் சிறுத்தைப்புலி நடமாட்டமா?

விழுப்புரத்தில் சிறுத்தைப்புலி நடமாட்டம் இருப்பதாக சமூகவலைதளங்களில் பரவிய தகவலால் பொதுமக்கள் பெரும் பீதியடைந்துள்ளனர்.

Update: 2022-07-06 17:14 GMT

விழுப்புரம்-திருச்சி நெடுஞ்சாலையில் நான்குமுனை சந்திப்புக்கும் புதிய பஸ் நிலையத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் திருமண மண்டபங்கள் உள்ளன. அதன் பின்புறம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் மற்றும் மரத்தோட்டங்களும், குடியிருப்பு பகுதிகளும் உள்ளது. இங்குள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு மத்தியில் உள்ள காலியிடங்களில் முட்புதர்கள் சூழ்ந்து அடர்ந்த காடுபோன்று உள்ளது.

இந்நிலையில் அப்பகுதியில் சிறுத்தைப்புலி நடமாட்டம் இருப்பதாகவும், ஒன்றிரண்டு பேர் சிறுத்தைப்புலியை பார்த்ததாகவும் தகவல் பரவியது. இந்த தகவல் காட்டுத்தீ போல அப்பகுதி பொதுமக்களிடையே வேகமாக பரவியது. இந்த தகவலை கேட்டதும் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் பெரும் பீதியில் உறைந்தனர்.

வனத்துறையினர் கண்காணிப்பு

இதனிடைய சிறுத்தைப்புலி நடமாட்டம் இருப்பதாக சமூகவலைதளங்களிலும் தகவல் வைரலாகியது. ஆனால் அப்பகுதியில் விசாரித்தபோது யாரும் சிறுத்தைப்புலியை நேரில் பார்க்கவில்லை என்று கூறப்படுகிறது. இருப்பினும் இதுசம்பந்தமாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின்பேரில் வனத்துறையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்று கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து வனத்துறையினரிடம் கேட்டபோது அவர்கள் கூறுகையில், பொதுமக்கள் அளித்த தகவலின்பேரில் நாங்கள் அங்கு விரைந்து சென்று கண்காணித்தோம். ஆனால் சிறுத்தைப்புலி நடமாட்டத்திற்கான எந்த தடயமும் இல்லை. சிறுத்தைப்புலி நடமாட்டம் இருப்பதாக நம்பத்தகுந்த தகவலும் இல்லை. இருந்தாலும் நாங்கள் கண்காணித்து வருகிறோம்.

கண்காணிப்பு பணி

விழுப்புரம்- கள்ளக்குறிச்சி மாவட்ட வனச்சரகங்களை பொறுத்தவரை காப்புக்காடுகளில் சிறுத்தையோ, புலியோ எதுவும் இல்லை. அப்படி இருக்கும் பட்சத்தில் மக்கள் நடமாட்டம் மிகுந்த அதுவும் நகரப்பகுதிக்குள் சிறுத்தைப்புலி வர வாய்ப்பு இல்லை. இருப்பினும் நாங்கள் பொதுமக்களின் பாதுகாப்பு நலன் கருதி தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். இந்த கண்காணிப்பு பணி நாளையும் (அதாவது இன்று) தொடரும். பொதுமக்களை பீதி அடையச்செய்யும் வகையில் யாரோ இதுபோன்ற வதந்திகளை சமூகவலைதளங்களில் பரவவிட்டிருக்கலாம். ஆகவே பொதுமக்கள் யாரும் பீதியடைய வேண்டாம் என்றனர்.

இருப்பினும் சிறுத்தைப்புலி நடமாட்டம் இருப்பதாக கூறப்படும் அந்த பகுதியில் பெரும் பதட்டமான சூழ்நிலையே நீடித்து வருகிறது.

............

Tags:    

மேலும் செய்திகள்