கர்நாடக தேர்தல் முடிவுகள் நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்குமா?பொதுமக்கள் கருத்து

கர்நாடக தேர்தல் முடிவுகள் நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்குமா? என்பது குறித்து பொதுமக்கள் தெரிவித்த கருத்துகளை பார்க்கலாம்.

Update: 2023-05-14 18:45 GMT

'அனைத்து சாலைகளும் ரோமாபுரிக்கு இட்டுச்செல்கின்றன' என்ற சொல் வழக்கு உண்டு. அதுபோல கடந்த சில மாதங்களாகவே இந்தியாவில் எல்லோருடைய பார்வையும் கர்நாடகாவை நோக்கியே இருந்தன.

கடந்த 10-ந் தேதி அங்கு வாக்குப்பதிவு நடந்தது. 13-ந் தேதி தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டன. கர்நாடகம் மிகவும் வித்தியாசமான முறையில் தேர்தல்களை சந்திக்கும் மாநிலமாகும். அங்கு ஒரு முறை பா.ஜ.க. வெற்றி பெற்றால், அடுத்த முறை காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும். இந்த தேர்தலில் அந்த வரலாற்றை முறியடித்தே தீருவோம் என்று பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோர் சபதம் எடுத்து பம்பரமாக சுழன்று தேர்தல் பணியாற்றினார்கள். காங்கிரசும் விட்டு வைக்கவில்லை. சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரும் பம்பரமாக சுழன்று தேர்தல் பிரசாரம் செய்தனர். முடிவில் காங்கிரஸ் 135 இடங்களும், பா.ஜ.க. 66 இடங்களிலும் வெற்றி பெற்றன. 'எங்கள் தயவு இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது' என்று உறுதியாக நம்பிக்கொண்டு இருந்த மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி 19 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இது தான் மக்களின் எண்ண ஓட்டம்.

வரப்போகும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் 'இதுதான் எதிரொலிக்கும் என்று எதிர்க்கட்சிகளும்', 'இல்லை, இல்லை மாநில தேர்தல்களின் முடிவுகள் மத்தியில் எதிரொலிக்க வாய்ப்பே இல்லை' என்று பா.ஜ.க. ஆதரவாளர்களும் உறுதியாக கூறுகிறார்கள்.

இந்தநிலையில் கர்நாடக தேர்தல் முடிவுகள் நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்குமா? என்று அரசியல் கலப்பில்லாத மக்கள் கூறிய கருத்துகள் விவரம் வருமாறு:-

மக்கள் மனநிலை

மத்திய ஜவுளித்துறையின் ஓய்வுபெற்ற அரசு செயலாளரும், தமிழக அரசின் பல்வேறு உயர் பொறுப்புகளில் பதவி வகித்தவருமான ஐ.ஏ.எஸ். அதிகாரி இரா.பூரணலிங்கம் கூறும்போது, 'கர்நாடக மாநிலத்தில் தற்போது நடந்து முடிந்துள்ள சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் அதிக இடங்களில் பெரும் வெற்றி பெற்று இருக்கிறது. மக்கள் நலன் கருதி கர்நாடக மாநிலத்தில் நல்ல ஆட்சியை அவர்கள் அளித்தால், 2024-ம் ஆண்டு நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் இதே போன்ற வெற்றியை அவர்கள் பெற முடியும். ஒரே ஆண்டில் மக்களின் மனநிலை மாற வாய்ப்பு இல்லை.

காங்கிரசின் இந்த எதிர்பாராத வெற்றி நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகள் இடையே ஒரு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. அதைப் பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைந்து செயல்பட்டால் நாடாளுமன்றத்திலும் மாறுதல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. நாட்டில் உள்ள பெரிய மாநிலங்களான உத்தரபிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில் வசிக்கும் பொதுமக்களின் மனநிலையைப் பொறுத்தும் இது இருக்கிறது' என்றார்.

சங்கநாதம் ஒலித்துள்ளது

ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியும், முன்னாள் கூடுதல் தலைமைச் செயலாளருமான இரா.கிறிஸ்துதாஸ் காந்தி கூறும்போது, 'கர்நாடக மாநில தேர்தல் முடிவுகள் நாடாளுமன்ற தேர்தலிலும் எதிரொலிக்க வேண்டும். இந்திய நாட்டில் ஜனநாயகம் என்பது தனிநாயகமாக மாறி வருகிறது. ஆகவே இந்திய நாட்டில் யார் ஆட்சி பொறுப்புக்கு வந்தாலும், எந்த கட்சி ஆட்சி பொறுப்புக்கு வந்தாலும் ஒரு 10 ஆண்டுகள் சுழற்சியில் கண்டிப்பாக ஒரு மாற்றம் வர வேண்டும். இல்லையென்றால் ஊறித்திழைத்த அரசியல்வாதிகளும், அவர்களது அரசு நிர்வாகத்தினரும் ஜனநாயத்தை சர்வாதிகார முறையில் மாற்றிக்கொண்டு விடுவார்கள். ஆகவே கண்டிப்பாக வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் மாற்றம் வேண்டும்.

அதேபோன்று மத்திய அரசின் ஆட்சி முறையை யாரும் ஒப்புக்கொண்டாலும், ஒப்புக்கொள்ளாவிட்டாலும் சரி, வடநாட்டினரின் சிந்தனையின் தொகுப்பாக அமைந்து வருகிறது. தென்னிந்திய அரசியலில் வடமாநிலங்களைவிட சற்று ஆறுதலான வகையில் ஜனநாயக பாங்கும், மதச்சார்பின்மையும், நாட்டு ஒற்றுமை உணர்வுகளும், கல்வி, பொருளாதார வளர்ச்சிகளும் சிறப்பாக இருக்கின்றன என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆகவே இந்த நல்ல அரசியல் போக்கு, இந்திய அளவில் எதிரொலிப்பதற்கு இந்த கர்நாடக தேர்தல் ஒரு சங்கநாதமாக ஒலித்து உள்ளது. கர்நாடகாவில் நடந்துள்ள மாற்றம் இந்திய அளவில் நடக்க வேண்டும் என்பது மக்களின் எண்ணமாக இருக்கிறது' என்றார்.

காங்கிரஸ் மிதவாத கட்சி

கட்டுரையாளர் பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி கூறும்போது, 'கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவுகளால் பா.ஜ.க.விற்கு மிகப்பெரிய நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. குறிப்பாக தென்மாநிலங்களில் 20 முதல் 30 நாடாளுமன்ற தொகுதிகள் பா.ஜ.க.விற்கு தேவைப்படுகிறது. ஆனால் அதற்கான வாய்ப்பு மங்கிவிட்டன. இந்திய அரசியலில் காங்கிரஸ் கட்சிக்கு தற்போது கிடைத்துள்ள வெற்றி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனென்றால் தேசிய அளவில் எல்லாரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு மிதவாத கட்சியாக காங்கிரஸ் மட்டுமே உள்ளது' என்றார்.

ராகுல்காந்தியின் செல்வாக்கு

பாலார்பட்டியை சேர்ந்த விவசாயி ஆண்டி கூறும்போது, 'கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றியில் ராகுல்காந்திக்கு பெரும்பங்கு இருக்கிறது. நாடு முழுவதும் ராகுல்காந்தி நடைபயணம் செய்தார். அதனால் அவருக்கு செல்வாக்கு அதிகரித்து இருந்தது. இந்த சூழலில் ராகுல்காந்தி எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதோடு, அவர் வசித்த அரசு வீட்டில் இருந்தும் காலி செய்யப்பட்டார். அது மக்கள் மத்தியில் அவரின் செல்வாக்கை அதிகரிக்கச் செய்துள்ளதை பார்க்க முடிகிறது. மற்றொருபுறம் கடந்த சில ஆண்டுகளாக விலைவாசி உயர்வு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு, சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு போன்றவை மக்களை அதிகம் பாதிக்க வைத்துள்ளது.

மத்தியில் பா.ஜ.க. ஆட்சி இருக்கும் சூழலில், இந்த வலைவாசி உயர்வு என்பது கர்நாடகாவில் ஆட்சியில் இருந்த பா.ஜ.க.வின் செல்வாக்கை குறைத்து இருப்பதாக பார்க்க முடிகிறது. இந்த வெற்றி அடுத்த ஆண்டு நடக்க உள்ள நாடாளுமன்ற தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. ஆனால் அந்த தாக்கம் எந்த அளவுக்கு இருக்கும் என்பது காங்கிரஸ் கட்சி நாடு முழுவதும் ஒவ்வொரு மாநிலங்களிலும் அமைக்கும் கூட்டணியை பொறுத்தது. பா.ஜ.க. ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் கட்சிகளுடன் கூட்டணி அமைத்துக் கொண்டு வலிமையான கூட்டணியாக இருந்தால் அது பெரிய அளவில் பலன் கொடுக்கும். அதே நேரத்தில் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவை வைத்து மட்டும் நாடாளுமன்ற தேர்தல் செல்வாக்கை முழுமையாக கணித்து விடவும் முடியாது' என்றார்.

நல்லாட்சி கொடுத்தால்...

கூடலூரை சேர்ந்த மணிமோகன் கூறும்போது, 'கர்நாடக மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றியுள்ளது. தேர்தலின் போது காங்கிரஸ் பல்வேறு நலத்திட்டங்களை வாக்குறுதியாக அறிவித்தது. பா.ஜ.க. தேர்தல் பிரசாரம் என்பது பெரும்பாலும் காங்கிரஸ் கட்சியை விமர்சனம் செய்தே அமைந்து இருந்ததாக பார்க்க முடிந்தது. அதுபோல், ஜி.எஸ்.டி. வரி விதிப்பு, சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு, விலைவாசி உயர்வு போன்றவற்றால் மத்திய அரசு மீது மக்களிடம் ஒருவித அதிருப்தி உள்ளது.

கர்நாடக மக்களிடம் ஏற்பட்ட அந்த அதிருப்தி காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக மாறி இருக்கலாம். காங்கிரஸ் கட்சியினர் அறிவித்த வாக்குகுறுதிகளை துரிதமாக நிறைவேற்றி நல்லாட்சி கொடுத்தால் இந்த தேர்தல் வெற்றியோடு, நல்லாட்சியின் தாக்கமும் சேர்ந்து நாடாளுமன்ற தேர்தலிலும் எதிரொலிக்க வாய்ப்புள்ளது' என்றார்.

பா.ஜ.க.வுக்கு பின்னடைவு

கம்பத்தை சேர்ந்த கட்டிட பொறியாளர் அன்பழகன் கூறும்போது, 'வடமாநிலங்களை விடவும் தென் மாநிலங்களில் உள்ள மக்களிடம் அரசியல் விழிப்புணர்வு அதிகம். மத்திய, மாநில அரசுகள் கொண்டு வரும் திட்டங்கள் பாதிப்பை ஏற்படுத்தும் என்றால் தென்மாநிலங்களில் தான் முதல் எதிர்ப்புக்குரல் எழும். தற்போது கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றி இருக்கிறது என்றால் அது ராகுல்காந்தியின் செயல்பாடு முக்கியத்துவம் வாய்ந்தது. நாடு முழுவதும் அவர் மேற்கொண்ட நடைபயணத்தில் எளிய மக்களை அதிகம் சந்தித்தார். அதனால், இந்த வெற்றி என்பது காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய நம்பிக்கையை கொடுக்கும்.

பா.ஜ.க.வுக்கு இந்த தேர்தல் தோல்வி பின்னடைவை கொடுக்கும். நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தலிலும் இது எதிரொலிக்க வாய்ப்புள்ளது. ஜி.எஸ்.டி. கொண்டு வரப்பட்டதால் தொழில்கள் பாதிப்பு, சிலிண்டர் விலை உயர்வு போன்றவை ஏழை, எளிய மக்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களுக்கும் பாதிப்பை கொடுத்துள்ளது. மக்கள் மனநிலை உடனடியாக மாற வாய்ப்பு இல்லை. இன்னும் ஓராண்டில் நாடாளுமன்ற தேர்தல் வருவதால், இந்த வெற்றி காங்கிரஸ் கட்சிக்கு கைகொடுக்கும் என்றே நினைக்கிறேன்' என்றார்.

எதிரொலிக்கும்

கம்பத்தை சேர்ந்த போட்டித்தேர்வு பயிற்சியாளர் பிரகாஷ் கூறும்போது, 'ராகுல்காந்தி மீதான நடவடிக்கை பா.ஜ.க.வுக்கு எதிராக மாறி இருப்பதை பார்க்க முடிகிறது. அதன் வெளிப்பாடாக கர்நாடகாவில் ஆட்சியை காங்கிரஸ் கைப்பற்றி இருக்கிறது. பா.ஜ.க. ஆட்சி செய்த மாநிலங்களில் கர்நாடகாவில் தான் ஊழல் அதிகம் என்று கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட மக்கள் அதிகம் தற்கொலை செய்து கொண்டது கர்நாடகாவில் தான். அதுவும் பா.ஜ.க.வுக்கு எதிராக மக்கள் வாக்களிக்க முக்கிய காரணம் என்று சொல்லலாம்.

நிச்சயம் இது நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும். தேசிய அளவில் பார்த்தோம் என்றால் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பு இல்லை. கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி அந்த மாநில தலைவர்களை முன்னிலைப்படுத்தியது. ஆனால், பா.ஜ.க. அதை செய்யவில்லை. அதுவும் காங்கிரஸ் வெற்றிக்கு ஒருவிதமான காரணம் தான்' என்றார்.

மேலும் செய்திகள்