பெயர்ந்து கிடக்கும் சாலை புதுப்பிக்கப்படுமா?

பகவதிபாளையத்தில் பெயர்ந்து கிடக்கும் சாலை புதுப்பிக்கப்படுமா? என்று கிராம மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Update: 2022-10-08 18:45 GMT

கிணத்துக்கடவு

பகவதிபாளையத்தில் பெயர்ந்து கிடக்கும் சாலை புதுப்பிக்கப்படுமா? என்று கிராம மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

பிரதான சாலை

கிணத்துக்கடவு அருகே பகவதிபாளையம் கிராமத்தில், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

இந்த கிராமம் வழியாக நெம்பர் 10 முத்தூர், சங்கராயபுரம், கோவிந்தாபுரம், சூலக்கல், முத்துக்கவுண்டனூர் உள்ளிட்ட கிராமங்களுக்கு தார்சாலை செல்கிறது. இது கிணத்துக்கடவுக்கு செல்லும் பிரதான சாலையாக விளங்குகிறது.

இந்த சாலை வழியாகத்தான் மேற்கண்ட கிராமங்களை சேர்ந்த பள்ளி மாணவ-மாணவிகள் உள்பட அனைத்து தரப்பினரும் கிணத்துக்கடவுக்கு வந்து செல்கின்றனர். இது தவிர விவசாயிகள் தங்களது விளைநிலங்களில் அறுவடை செய்யும் காய்கறிகளை கிணத்துக்கடவு சந்தைக்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர்.

தவறி விழுந்து காயம்

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக அந்த சாலை பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. பல இடங்களில் சாலை பெயர்ந்து கிடக்கிறது. இதனால் மண்சாலை போன்று காட்சியளிக்கிறது.

மழை பெய்யும் சமயத்தில் அந்த சாலையில் தண்ணீர் அதிகளவில் தேங்கி நிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் அவதிப்படுகிறார்கள். குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் தவறி விழுந்து காயம் அடையும் நிலை உள்ளது.

புதுப்பிக்க வேண்டும்

இதுகுறித்து கிராம மக்கள் கூறியதாவது:-

பகவதிபாளையத்தில் இருந்து நெம்பர் 10 முத்தூர் செல்லும் வழியில் உள்ள தார்சாலை பல இடங்களில் சேதமடைந்து உள்ளது. அந்த சாலையை பயன்படுத்தவே மிகவும் சிரமமாக இருக்கிறது. குறிப்பாக இரவில் அந்த வழியாக சென்றால், விபத்தில் சிக்கி கொள்ள அதிக வாய்ப்பு உள்ளது.

அதிக பாரம் ஏற்றி கனரக வாகனங்கள் செல்வதால்தான், அந்த சாலை விரைவில் பழுதடைந்து விடுகிறது. இதை அதிகாரிகள் யாரும் கண்டு கொள்வது இல்லை. இதை தடுக்க கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்க வேண்டும். மேலும் சாலையை உடனடியாக சீரமைத்து புதுப்பிக்க சம்பந்தப்பட்ட துறையினர் முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்