பழுதடைந்த அங்கன்வாடி மையம் சீரமைக்கப்படுமா?

அய்யன்கொல்லியில் பழுதடைந்த அங்கன்வாடி மையத்தை சீரமைக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர் பார்த்து உள்ளனர்.

Update: 2022-07-25 14:09 GMT

பந்தலூர், 

அய்யன்கொல்லியில் பழுதடைந்த அங்கன்வாடி மையத்தை சீரமைக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர் பார்த்து உள்ளனர்.

பழுதடைந்த கட்டிடம்

பந்தலூர் அருகே அய்யன்கொல்லியில் அங்கன்வாடி மையம் உள்ளது. இந்த மையத்தில் அய்யன்கொல்லி, குழிக்கடவு, செறியேரி, அம்பலபாடி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் சேர்ந்து உள்ளனர். அங்கு குழந்தைகளுக்கு சத்தான உணவு கொடுக்கப்படுகிறது. குழந்தைகள் வயதுக்கேற்ற எடை உள்ளதா என்று அளவீடு செய்து, அதற்கேற்ப பணியாளர்கள் கவனித்து வருகின்றனர்.

இதற்கிடையே அங்கன்வாடி மைய கட்டிடம் பழுதடைந்து காணப்பட்டது. இதனால் கட்டிடத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், தரமான முறையில் சீரமைப்பு பணி நடைபெறவில்லை என்று தெரிகிறது. இதனால் மீண்டும் அங்கன்வாடி மைய கட்டிடம் பழுதடைந்து உள்ளது. கட்டிடத்தின் மேற்கூரை ஓடுகள் உடைந்தும், பெயர்ந்தும் தொங்கி கொண்டிருக்கிறது.

சீரமைக்க வேண்டும்

தற்போது மழை பெய்து வருவதால் பழுதான மேற்கூரை வழியாக தண்ணீர் உள்ளே ஒழுகுகிறது. இதனால் மையத்தில் உள்ள குழந்தைகள் நனைந்து வருகின்றனர். அவர்கள் விளையாட முடியாமலும், ஓய்வெடுக்க முடியாமலும் அவதிப்படுகின்றனர். மேற்கூரை ஓடுகள் எப்போது வேண்டுமானாலும் உடைந்து கீழே விழும் நிலையில் உள்ளது. இதனால் விபரீதம் ஏற்படும் அபாயம் காணப்படுகிறது. இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, அய்யன்கொல்லி அங்கன்வாடி மையம் கடந்த சில மாதங்களாக பழுதடைந்து மோசமான நிலையில் உள்ளது. தொடர் மழையால் மையத்தில் உள்ள குழந்தைகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நடப்பாண்டு முதல் அங்கன்வாடி மையத்தில் எல்.கே.ஜி., யு.கேஜி. வகுப்பு சேர்க்கை நடந்து வருகிறது. இதனால் குழந்தைகள் சேர்க்கை மேலும் அதிகரிக்கும். எனவே, அங்கன்வாடி மையத்தை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்