சேதமடைந்த பயணிகள் நிழலகம் சீரமைக்கப்படுமா?
கூத்தாநல்லூர் அருகே சேதமடைந்த பயணிகள் நிழலகம் சீரமைக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
கூத்தாநல்லூர்:
கூத்தாநல்லூர் அருகே சேதமடைந்த பயணிகள் நிழலகம் சீரமைக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
பயணிகள் நிழலகம்
கூத்தாநல்லூர் அருகே வடபாதிமங்கலத்தில் இருந்து கோட்டூர் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, திருவாரூர், வேதாரண்யம், கோட்டூர், முத்துப்பேட்டை, ஆதிச்சபுரம், கூத்தாநல்லூர், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம் போன்ற பகுதிகளை இணைக்கும் முக்கிய வழித்தடமாக உள்ளது.
இந்த சாலையில் அரசு பஸ்கள் மற்றும் மினி பஸ்கள் சென்று வருகின்றன. இந்த நிலையில் இந்த சாலையில் குலமாணிக்கம் என்ற இடத்தில் அப்பகுதி மக்களின் பயன்பாட்டிற்காக பயணிகள் நிழலகம் கட்டப்பட்டது.
விரிசல்கள் ஏற்பட்டுள்ளது
இந்த பயணிகள் நிழலகத்தை குலமாணிக்கம், பள்ளிவர்த்தி, காரியமங்கலம், விக்ரபாண்டியம், அன்னுகுடி, சோலாட்சி, பெரியகொத்தூர், மன்னஞ்சி, ராமநாதபுரம், பெரியகுருவாடி, வடபாதிமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் மற்றும் பள்ளி மாணவ-மாணவிகள் பஸ் வரும் வரை காத்திருப்பதற்காக இந்த பயணிகள் நிழலகத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த பயணிகள் நிழலகம் கடந்த சில ஆண்டுகளாக சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது. குறிப்பாக கட்டிடத்தின் மேற்கூரை மற்றும் இருக்கைகளில் விரிசல்கள் ஏற்பட்டும், தரைதளம் மற்றும் ஜன்னல் சேதமடைந்தும் காணப்படுகிறது.
பயன்படுத்த முடியாத நிலை
இதனால் மழை நேரங்களில் மழை நீர் உள்ளே வருவதால், நிழலகத்தில் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். மேலும் பயணிகள் நிழலகத்தின் உள்ளே மது பாட்டில்கள் மற்றும் குப்பைகள் சூழ்ந்து காணப்படுகிறது.
இதனால் இந்த பயணிகள் நிழலகத்தை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பயணிகள் சாலையோரங்களில் நிற்க வேண்டிய நிலை உள்ளது. எனவே சேதமடைந்த பயணிகள் நிழலகத்தை சீரமைத்து தர வேண்டும் என்று அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.