பக்கிங்காம் கால்வாயின் குறுக்கே பாலம் கட்டும் பணி முடிவடையுமா?

கொள்ளிடம் அருகே பக்கிங்காம் கால்வாயின் குறுக்கே பாலம் கட்டும் பணி 3½ ஆண்டுகளாக முடங்கி கிடக்கிறது. இந்த பணி முடிவடையுமா? என கிராம மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

Update: 2022-11-20 18:45 GMT

கொள்ளிடம்:

கொள்ளிடம் அருகே பக்கிங்காம் கால்வாயின் குறுக்கே பாலம் கட்டும் பணி 3½ ஆண்டுகளாக முடங்கி கிடக்கிறது. இந்த பணி முடிவடையுமா? என கிராம மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

பாலம் இடிந்து விழுந்தது

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே தாண்டவன் குளம் கிராமத்திலிருந்து கொட்டாய் மேடு, ஓலகொட்டாய்மேடு, மடவா மேடு, பழையாறு மீன்பிடி துறைமுகம், புதுப்பட்டினம், கூழையாறு, திருமுல்லைவாசல் உள்ளிட்ட கடலோர மீனவ கிராமங்களுக்கு செல்லும் வகையில் கடற்கரை ஓரம் உள்ள சாலையை இணைக்கும் வகையில் இணைப்பு சாலை அமைந்துள்ளது. தாண்டவன்குளம் கிராமத்தில் இருந்து கடற்கரை ஓர சாலைக்கு செல்லும் இந்த சாலையின் குறுக்கே பக்கிங்காம் கால்வாய் செல்கிறது. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இந்த சாலையின் நடுவே பக்கிங்காம் கால்வாய் குறுக்கே கட்டப்பட்டிருந்த பாலம் இடிந்து விழுந்தது. இதனால் போக்குவரத்துக்கு சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து பழைய பாலத்துக்கு பதிலாக புதிய பாலம் கட்ட நபார்டு திட்டத்தின் மூலம் ரூ.3.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

பணிகள் முடக்கம்

இதையடுத்து பாலம் கட்டும் பணி கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கியது. இந்த பணிகள் 20 சதவீதம் கூட முடிவடையவில்லை. பல்வேறு காரணங்களால் ஒரு சில மாதங்களிலேயே பணிகள் நிறுத்தப்பட்டு விட்டன. இதுவரை பாலத்தை முழுமையாக கட்டி முடிக்க நடவடிக்கை எடுக்காததால், தாண்டவன்குளம் கிராமத்தில் இருந்து கடற்கரையோர சாலையில் அமைந்துள்ள கிராமங்களுக்கு செல்லும் பள்ளி மாணவர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் உள்பட அனைத்து தரப்பினரும் சிரமப்பட்டு வருகிறார்கள்.

கடற்கரையோர மீனவ கிராமங்களின் சார்பில் பலமுறை கோரிக்கை விடுத்தும் இந்த பாலத்தை கட்டி முடிக்க நடவடிக்கை எடுக்கவில்லை. கடந்த 3½ ஆண்டுகளாக பாலம் கட்டும் பணி முடங்கி கிடப்பதாக கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட சாலை

பக்கிங்காம் கால்வாயில் பாலம் கட்டும் பணி தொடங்கியபோது அங்கு போக்குவரத்துக்காக தற்காலிக இணைப்பு சாலை அமைக்கப்பட்டது. இந்த இணைப்பு சாலை வழியாகத்தான் போக்குவரத்து நடந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கன மழையால் பக்கிங்காம் கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தற்காலிக சாலை அடித்து செல்லப்பட்டது.

இதையடுத்து கடலோர கிராம மக்கள் கொள்ளிடம், சீர்காழி, சிதம்பரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல மாற்றுப்பாதையை பயன்படுத்தினர். தற்போது கால்வாயில் வெள்ள ஓட்டம் குறைந்த நிலையில், கொள்ளிடம் ஒன்றியக்குழு தலைவர் ஜெயப்பிரகாஷ் மற்றும் அதிகாரிகள் தற்காலிக சாலையை சீரமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

விரைந்து முடிக்க வேண்டும்

இதுகுறித்து கொட்டாய்மேடு கிராம மக்கள் கூறுகையில், பக்கிங்காம் கால்வாயில் பாலம் கட்டும் பணி 3½ ஆண்டுகளாக முடங்கி கிடப்பதால் தினசரி சிரமப்பட்டு வருகிறோம். பாலம் கட்டும்பணி நிறுத்தப்பட்டதற்கான காரணம் என்னவென்று இதுவரை தெரியவில்லை. பாலத்தை விரைந்து கட்டி முடிக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்