சேலம் அரியாகவுண்டம்பட்டியில் பன்மாடி வெள்ளிக்கொலுசு வளாகம் அமைக்கும் பணி விரைந்து முடிக்கப்படுமா?-உற்பத்தியாளர்கள் எதிர்பார்ப்பு

சேலம் அரியாகவுண்டம்பட்டியில் நடந்து வரும் பன்மாடி வெள்ளிக்கொலுசு வளாகம் அமைக்கும் பணி விரைந்து முடிக்கப்படுமா? என்று வெள்ளி கொலுசு உற்பத்தியாளர்களிடம் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Update: 2023-06-29 20:29 GMT

வெள்ளிக்கொலுசு

சேலம் மாவட்டத்தில் செவ்வாய்பேட்டை, சூரமங்கலம், குகை, சிவதாபுரம், பனங்காடு, கொண்டலாம்பட்டி, தளவாய்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளில் வெள்ளிக்கொலுசு உற்பத்தி அதிகளவில் நடைபெற்று வருகிறது. இங்கு சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெள்ளிக்கொலுசு சார்ந்த பட்டறைகள் உள்ளன. சேலம் வெள்ளி கொலுசு என்றாலே தனி மவுசு உண்டு.

அதாவது, கைவினை கலைஞர்களால் நேர்த்தியான வடிவமைப்பும், கலை நியமிக்க வேலைபாடுகளுடன் தயாரிக்கப்படும் வெள்ளிக்கொலுசுகள் நீடித்து உழைக்கும் என்பதால் சேலம் வெள்ளிக்கொலுசுக்கு உலக அளவில் நல்ல மவுசு இருந்து வருகிறது.

பன்மாடி வளாகம்

இரு ஒருபுறம் இருக்க, சேலத்தில் வெள்ளிக்கொலுசு தொழிலை மேம்படுத்தும் வகையிலும், இத்தொழிலில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள் ஒரே இடத்தில் அமர்ந்து கொலுசு உற்பத்தி செய்யும் வகையிலும் அரியாகவுண்டம்பட்டியில் ரூ.24 கோடியே 55 லட்சம் மதிப்பீட்டில் பன்மாடி வெள்ளிக்கொலுசு வளாக கட்டிடம் கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதற்கான கட்டுமான பணி கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது.

அங்கு 100 தொழில் நிறுவனங்கள் செயல்படும் வகையில் 3 மாடி கட்டிடமாக கட்டும் பணிகள் தொடங்கி நடை பெற்று வருகிறது. எனவே, இன்னும் சில மாதங்களில் தீபாவளி பண்டிகையும், அதற்கு அடுத்தடுத்த மாதங்களில் புத்தாண்டு, பொங்கல் பண்டிகை வர உள்ளதால் பன்மாடி வெள்ளிக்கொலுசு வளாகம் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று வெள்ளி கொலுசு உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரசியல் தலையீடு இருக்கக்கூடாது

அரியாகவுண்டம்பட்டியை சேர்ந்த வெள்ளி கொலுசு உற்பத்தியாளர் பெருமாள்:-

சேலத்தில் வெள்ளிக்கொலுசு தொழிலை மேம்படுத்தும் வகையில் கட்டப்பட்டு வரும் பன்மாடி வளாக கட்டுமான பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். அதேசமயம், கடைகளை ஒதுக்குவதில் அரசியல் தலையீடு இருக்கக்கூடாது. இதனை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். ஆண்டு முழுவதும் வெள்ளிக்கொலுசு தொழிலில் ஈடுபட்டு வரும் நபர்களுக்கு மட்டுமே பன்மாடி வளாகத்தில் கடைகளை ஒதுக்கீடு செய்து கொடுக்க வேண்டும்.

விரைந்து முடிக்க வேண்டும்

கருங்கல்பட்டியை சேர்ந்த அண்ணாமலை:-

சேலம் வெள்ளிக்கொலுசு தொழிலை சர்வதேச தரத்திற்கு கொண்டு செல்லும் வகையில் சேலம் மேற்கு தொகுதிக்கு உட்பட்ட அரியாகவுண்டம்பட்டியில் ரூ.24 கோடியே 55 லட்சம் மதிப்பில் பன்மாடி வெள்ளிக்கொலுசு உற்பத்தி மையம் அமைக்கும் பணி தொடங்கி ஓராண்டு முடிந்துவிட்டது. அங்கு நடந்து வரும் கட்டுமான பணியை விரைந்து முடித்து அங்கு வெள்ளிக்கொலுசு உற்பத்தி தொடங்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரே இடத்தில் வெள்ளிக்கொலுசு உற்பத்தியில் தொழிலாளர்கள் ஈடுபடுவதால் காலவிரயம் தவிர்ப்பதோடு குறித்த நாளில் வெள்ளிக்கொலுசு உற்பத்தி செய்துமுடிக்க முடியும். இதன்மூலம் வெள்ளிக்கொலுசு ஆர்டர்கள் அதிகளவில் வருவதற்கு வாய்ப்பு ஏற்படும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்