அரியலூர் ரெயில்வே மேம்பாலத்தின் இருபுறமும் சர்வீஸ் சாலை அமைக்கப்படுமா?

அரியலூர் ரெயில்வே மேம்பாலத்தின் இருபுறமும் சர்வீஸ் சாலை அமைக்கப்படுமா? என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்து உள்ளனர்.

Update: 2022-09-25 17:44 GMT

ரெயில்வே மேம்பாலம்

அரியலூரில் இருந்து பெரம்பலூர் செல்லும் சாலையில் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை நுழைவுவாயிலில் இருந்து ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த பணிகள் அனைத்தும் கடந்த 2019-ம் ஆண்டு நிறைவடைந்தது. இதையடுத்து, பாலத்தின் இருபுறமும் சர்வீஸ் சாலைகள் அமைப்பதற்காக தனியார் இடங்கள் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கின.

இதனைதொடர்ந்து அல்லி நகரத்திலிருந்து அரியலூர் வரும் சாலையில் இருபுறமும் சர்வீஸ் சாலைகள் போடப்பட்டன. அரியலூரில் இருந்து ரெயில் நிலையம் செல்வதற்கு சர்வீஸ் சாலை அமைக்கும் பணி நடைபெற்றுக்கொண்டிருந்தபோது சில கட்டிட உரிமையாளர்கள் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதனால் பணிகள் முழுமை பெறாமல் பாதியில் நின்றன.

சுரங்கப்பாதை

இந்த நிலையில் மேம்பாலம் திறக்கப்பட்டு வாகனங்கள் சென்று வருகின்றன. மேம்பாலத்தின் மேற்குப்பகுதியில் உள்ள அல்லிநகரம், உசேன் நகரம், பிலிமிசை, கூத்தூர், கொளக்கானத்தம் மற்றும் நூற்றுக்கணக்கான கிராமங்களுக்கு அந்த பகுதியில் உள்ள மின் மயானத்திற்கு நடந்தும், சைக்கிள் மற்றும் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் ரெயில் தண்டவாளங்களை கடப்பதற்காக ஒரு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டது. இதில் கார், ஆட்டோ உள்ளிட்ட சிறிய வாகனங்கள் சென்று வருகின்றன.

இந்த பாதை முழுவதும் மண் பாதையாக உள்ளது. லேசாக மழை பெய்தாலே சுரங்கப்பாதையில் மழை நீர் தேங்கி விடுகிறது. இதனால் அந்த வழியாக செல்பவர்கள் கீழே விழுந்து விடுகின்றனர். மேலும் சாலையின் இருபுறமும் முட்புதர்கள் மண்டி கிடக்கின்றன.

சர்வீஸ் சாலை அமைக்கப்படுமா?

ரெயில் நிலையத்திற்கு செல்பவர்கள் சர்வீஸ் சாலை இல்லாததால் பல கிலோமீட்டர் சுற்றி செல்ல வேண்டிய அவலநிலை உள்ளது. மேம்பாலத்தின் மேற்கு பகுதியில் வாகனங்கள் செல்ல அந்தப் பகுதியில் குடியிருக்கும் பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து ஜல்லிக்கற்களை கொட்டி தற்காலிகமாக சாலை அமைத்துள்ளனர். எதிரெதிரே வாகனங்கள் வந்தால் இந்த சாலையில் செல்ல முடியாது.

எனவே சாலையின் கிழக்கு புறம் உள்ள கட்டிடங்கள் முழுமையாக கையகப்படுத்தப்பட்டு அந்த பகுதியில் சர்வீஸ் சாலை அமைத்து பொதுமக்கள் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே வாகன ஓட்டிகளின் முக்கிய கோரிக்கையாகும். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரியலூர் நகர மக்கள் எதிர்பார்த்து வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்