தூர்ந்து கிடக்கும் பாக்கம்பாடி ஏரி தூர்வாரப்படுமா?
தூர்ந்து கிடக்கும் பாக்கம்பாடி ஏரி தூர்வாரப்படுமா? என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
விவசாயிகள் எதிர்பார்ப்பு
ஆறுகள், ஏரி, குளம் போன்ற நீர் நிலைகள் குடிநீர் மற்றும் பாசனத்துக்கு முக்கிய ஆதரமாக விளங்கி வருகின்றன. இதனால்தான் நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் வருவாய் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றி ஆழப்படுத்தி சீரமைத்து வருகின்றனர். ஆனால் அனைத்து நீர் நிலை ஆக்கிரமிப்புகளையும் அகற்றி விட்டார்களா என்றால் அது கேள்விக்குறியாகத்தான் உள்ளது. இதற்கு உதாரணமாக சின்னசேலம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பாக்கம்பாடி கிராமத்தில் உள்ள பெரிய ஏரி உள்ளது.
120 ஏக்கர் பரப்பளவு
மாவட்டத்தின் கடைகோடி பகுதியில் அமைந்துள்ள இக்கிராமத்தில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் பிரதான தொழிலாக விவசாயம் உள்ளது. இங்கு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஹெக்டேர் பரப்பளவில் நெல், கம்பு, மக்காச்சோளம், கேழ்வரகு, மணிலா, உளுந்து, கரும்பு, மஞ்சள், மரவள்ளி உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.
விவசாய நிலங்களுக்கு பாசன வசதி மற்றும் குடிநீர் ஆதாரமாக இந்த கிராமத்தில் உள்ள பெரிய ஏரி உள்ளது. பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரி சுமார் 120 ஏக்கர் பரப்பளவுடையது ஆகும். மழைக்காலங்களில் வதிஷ்ட நதியில் வரும் தண்ணீர் பாய்ந்தோடி பெரிய ஏரிக்கு வரும். பின்னர் இந்த ஏரியில் நிரம்பி வழியும் தண்ணீர் சுற்றியுள்ள கூகையூர் குரால், வீரபயங்கரம், காலசமுத்திரம், மாமாந்தூர், சின்னாவரம், பெத்தா சமுத்திரம், அலம்பளம், நைனார்பாளையம், மங்களூர் உள்ளிட்ட 27 ஏரிகளுக்கு செல்கிறது. ஆக பாக்கம்பாடி கிராமம் மட்டுமின்றி பல்வேறு கிராமமக்களின் குடிநீர் தேவைக்கும், விவசாயத்துக்கும் நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது.
70 ஏக்கர் ஆக்கிரமிப்பு
ஆனால் காலப்போக்கில் முறையான பராமரிப்பு இல்லாததால் பெரிய ஏரி செடி, கொடிகள், சீமை கருவேல மரங்கள் வளர்ந்து தூர்ந்து போய் காணப்படுகிறது. மேலும் சுமார் 70 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பின் பிடியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஏரி பொலிவிழந்து சிறிய ஏரியாக காட்சி அளிக்கிறது. மழைக்காலங்களில் வரும் தண்ணீர் குறைந்த அளவிலேயே ஏரியில் தேங்கி நிற்கிறது. மீதமுள்ள தண்ணீர் கிளை வாய்க்கால் வழியாகவும் , தாழ்வான பகுதிகளை நோக்கியும் பாய்ந்தோடுகிறது.
இந்த நிலை நீடித்தால் பெரிய ஏரி இருக்கும் இடம் தெரியாமல் போய் விடும் என்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் துரித நடவடிக்கை மேற்கொண்டு பெரிய ஏரியில் உள்ள செடி, கொடிகள், சீமைக்கருவேல மரங்கள், ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இது குறித்து இப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:-
தண்ணீர் பிரச்சினை
பாக்கம்பாடி ஏரியை நம்பி ஆயிரக்கணக்கான ஹெக்டர் பரப்பளவில் விவசாயிகள் பயிர்சாகுபடி செய்து வருகிறார்கள். ஆனால் ஏரி குறைந்த அளவு ஆழம் இருப்பதாலும், கரைகள் ஆங்காங்கே உடைந்து இருப்பதாலும் முழு கொள்ளளவை எட்டினாலும் தண்ணீர் விரைவாக வடிந்து விடுகிறது.
ஏரியில் நிற்கும் சீமை கருவேல மரங்கள் தண்ணீரை அதிக அளவில் உறிஞ்சுவதால் ஒவ்வொரு ஆண்டும் ஏரியில் தண்ணீர் நிரம்பினாலும் உடனடியாக வற்றி விடுவதோடு மட்டுமின்றி சுற்றியுள்ள கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டமும் வெகுவாக குறைந்து விடுகிறது. இதனால் விவசாயம் மற்றும் குடிநீருக்கு தண்ணீர் பிரச்சினை ஏற்படுகிறது. நிலத்தடி நீரை பருகினாலும் அது உவர்ப்பு தன்மையாக காணப்படுகிறது.
மண் கடத்தல்
இது ஒரு பக்கம் இருக்க பெரிய ஏரியில் ஆக்கிரமிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலை நீடித்தால் சினிமாவில் வரும் காமெடியில் நடிகர் வடிவேல் என் கிணத்தை காணோம், என்று கூறுவதை போல் எங்க ஊரு பெரிய ஏரியை காணோம் என்று சொல்ல வேண்டிய நிலை வந்துவிடுமோ என்ற அச்சம் உள்ளது. மேலும் இரவு நேரங்களில் சமூக விரோதிகள் ஏரியில் இருந்து மண்ணை கடத்தி செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஏரியை நேரடியாக ஆய்வு செய்து அங்கு வளர்ந்து நிற்கும் சீமை கருவேல மரங்களையும், ஆக்கிரமிப்புகளையும் அகற்றி ஏரியை தூர்வாரி ஆழப்படுத்த வேண்டும், மண் கடத்தும் சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.