ஆடிப்பட்டம் தேடி விதைக்க முடியாததால் ஆவணியிலாவது மழை பெய்யுமா?

கரூர் மாவட்டத்தில் ஆடிப்பட்டம் தேடி விதைக்க முடியாததால் ஆவணியிலாவது மழை பெய்யுமா? என விவசாயிகள் வானத்தை பார்த்து காத்திருக்கின்றனர்.

Update: 2022-08-19 19:02 GMT

மானாவாரி நிலங்கள்

கரூா் மாவட்டத்தில் காவிாி, அமராவதி என 2 ஆறுகள் ஓடினாலும் அதனால் பயன் பெறும் விவசாய நிலப்பரப்பு மிகவும் குறைவே, இதனால் மாவட்டத்தின் பெரும்பகுதி மானாவாாி விவசாயமே நடைபெற்று வருகிறது. இந்த மானாவாரி விவசாயம் சீரான முறையில் நடைபெற பருவமழை உரிய காலத்தில் பெய்ய வேண்டும்.

சித்திரை மாதத்தில் உரிய அளவில் கோடை மழை பெய்தால், மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் தங்களின் மானாவாரி நிலங்களை கோடை உழவு செய்து, தொடர்ந்து வரும் பருவமழை காலத்தில் பயிர் செய்ய தயார் படுத்தி வைத்திருப்பர். வைகாசி மாதத்தில் பெய்யும் மழையை கொண்டு சோளம், துவரை பயிர் செய்வர். ஆடி மாதத்தில் பெய்யும் மழையை கொண்டு எள், ஆமணக்கு, சூரியகாந்தி, நிலக்கடலை, மக்காச்சோளம் என மானாவாரி நிலங்களில் விளைச்சல் தரக்கூடிய பயிர்களை அதிக அளவில் பயிர் செய்வர்.

ஏமாற்றமே மிஞ்சியது

இந்த பயிர்களின் விளைச்சல் விவசாயிகளுக்கு ஓரளவு வருமானத்தை தரக்கூடியதாக இருக்கும். மேலும் கால்நடைகளுக்கு தீவனப் பயிர்களும் கிடைக்கும். கடந்த சில ஆண்டுகளாக பருவமழை உரிய காலத்தில் பெய்யாமையால் மானாவாரி விவசாயம் செய்ய முடியாமல் வருமானம் இன்றி விவசாயிகள் வேதனையில் இருந்து வருகின்றனர்.

மேலும் விவசாயத்திற்கு மாற்று தொழிலாக விவசாயிகள் செய்து வரும் கறவை மாடு வளர்த்தல் தொழிலுக்கும், தீவனப்பயிர்களை வெளி மாவட்டங்களில் இருந்து விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலையும் ஏற்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும், இந்த ஆண்டாவது உரிய காலத்தில் மழை பெய்யும், பயிர் செய்யலாம் என காத்திருக்கும் விவசாயிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது.

காத்திருக்கும் விவசாயிகள்

இந்த ஆண்டு சித்திரை மாதத்தில் மாவட்டத்தின் சில பகுதிகளில் கோடை மழை சிறிதளவு பெய்தது. அந்த மழையை பயன்படுத்தி விவசாயிகள் கோடை உழவு செய்தனர். அதன்பிறகு வைகாசி மாதத்தில் மழை பெய்யாமல் சோளம், துவரை பயிர் செய்வது பாதிக்கப்பட்டுள்ளது. "ஆடிப்பட்டம் தேடி விதை" என்ற முன்னோரின் வாக்கிற்கிணங்க ஆடி மாதத்தில் பெய்யும் மழையை கொண்டு பயிர் செய்யலாம் என காத்திருந்த விவசாயிகளுக்கு மழை பெய்யாமல் ஏமாற்றிவிட்டது. இப்போது ஆவணி மாதம் பிறந்துவிட்ட நிலையில் வரும் நாட்களிலாவது மழை பெய்து மானாவாரி விவசாயத்திற்கு உதவுமா? என விவசாயிகள் காத்திருக்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்