இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கப்படுமா? அமைச்சர் சக்கரபாணி விளக்கம்
இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கப்படுமா? என்பது குறித்து அமைச்சர் சக்கரபாணி விளக்கம் அளித்துள்ளார்.;
கடலூர்,
கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் சக்கரபாணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் கொள்முதல் நிலையங்கள் மூலம் கடந்த ஓராண்டில் 35 லட்சத்து 35 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு, அதற்காக ரூ.7 ஆயிரம் கோடி விவசாயிகளுக்கு பணம் கொடுக்கப்பட்டுள்ளது.
இதுதவிர 11 லட்சத்து 42 ஆயிரம் பேருக்கு புதிய குடும்ப அட்டை வழங்கப்பட்டுள்ளன. இதில் கடலூர் மாவட்டத்தில் மட்டும் 33 ஆயிரத்து 888 பேருக்கு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது.
தரமான பொருட்கள்
சில நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஊழியர்கள் கையூட்டு பெறுவதாக புகார்கள் வருகிறது. அதனை கட்டுப்படுத்த அனைத்து கொள்முதல் நிலையங்களிலும் புகார் பெட்டி வைக்கப்பட்டுள்ளது.
அந்த புகார் பெட்டியின் சாவி கலெக்டரிடம் மட்டுமே இருக்க வேண்டும். பின்னர் அந்த புகார் மீது அவர் நடவடிக்கை எடுப்பார். மேலும் குடோனில் இருந்து தரமான பொருட்களை தான் ரேஷன் கடைக்கு கொண்டு செல்ல வேண்டும். தரமில்லாத பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா என்பதை கலெக்டர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். கடைகளுக்கு தரமில்லாத பொருட்களை கொடுத்து விட்டு விற்பனையாளர் மீது குறை கூறக்கூடாது.
மாதம் 1,000 ரூபாய்
மேலும் தேர்தல் அறிக்கையில் இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என முதல்-அமைச்சர் தெரிவித்திருந்தார். அதாவது 505 தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தார். அவற்றில் 208 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மீதமுள்ள வாக்குறுதிகள் கண்டிப்பாக நிறைவேற்றப்படும். இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உரிய நேரத்தில் வழங்க முதல்-அமைச்சர் ஏற்பாடு செய்வார்.
இவ்வாறு அவர் கூறினார்.
குண்டர் சட்டம்
அதனை தொடர்ந்து சிதம்பரம் மணலூரில் உள்ள தமிழ்நாடு வாணிப கழக உணவு குடோனுக்கு சென்று அங்கிருந்த பருப்பு மற்றும் அரிசியை ஆய்வு செய்த அமைச்சர் சக்கரபாணி நிருபர்களிடம் கூறுகையில், ரேஷன் பொருட்கள் கடத்துவோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். அரசு பொறுப்பேற்ற பிறகு உணவுப்பொருள் வழங்கல் துறையில் தற்போது 4 போலீஸ் சூப்பிரண்டுகள் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் உள்ள 286 குடோன்களை சீரமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.