உழவர் சந்தைகள் புத்துயிர் பெறுமா?
உழவர் சந்தைகள் புத்துயிர் பெற வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
உழவர் சந்தை
நாட்டின் முதுகெலும்பான விவசாய தொழிலை பேணிக்காப்பதற்காக மத்திய-மாநில அரசுகள் தொடர்ந்து திட்டங்களை நிறைவேற்றி வந்தாலும், சில திட்டங்கள்தான் பேசப்படுகின்றன. வரவேற்பை பெறுகின்றன. அந்த வகையில் மறைந்த முதல்-அமைச்சர் கருணாநிதி, மதுரை மாவட்டம் அண்ணாநகரில் கடந்த 1999-ம் ஆண்டு நவம்பர் 14-ந்தேதி தொடங்கி வைத்த உழவர் சந்தை திட்டம் உன்னத திட்டமாக போற்றப்பட்டது.
இந்த திட்டத்தின் நோக்கம், விவசாயிகள் தங்கள் நிலத்தில் விளைவிக்கும் காய்கறிகள், பழங்களை இடைத்தரகர்கள் தலையீடு இல்லாமல் நேரடியாக மக்களிடம் விற்பனை செய்து நல்ல லாபம் அடைய வேண்டும். மக்களும் மனநிறைவு பெற வேண்டும் என்பதுதான். ஆரம்பத்தில் மிகுந்த வரவேற்பை பெற்றிருந்த இந்த சந்தை கடந்த 10 ஆண்டுகளாக அடையாளத்தை இழந்து கால்நடைகள் கட்டவும், வாகனங்களை நிறுத்தவும், மது பிரியர்கள் சங்கமிக்கும் இடமாகவும் மாறியது.
இந்த நிலையில் தி.மு.க. ஆட்சி மீண்டும் அமைந்தவுடன் இந்த திட்டத்துக்கு புத்துயிர் கொடுக்கும் முயற்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மும்முரம் காட்டியதால் உழவர் சந்தைகள் மீண்டும் புதுப்பொலிவு பெற்றன.
4-ல் ஒன்று மட்டுமே செயல்படுகிறது
இந்நிலையில் பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் பெரம்பலூர், வேப்பந்தட்டை, அரியலூர், ஜெயங்கொண்டம் ஆகிய பகுதிகளில் உழவர் சந்தைகள் திறக்கப்பட்டாலும், அரியலூர், ஜெயங்கொண்டம், வேப்பந்தட்டை ஆகிய 3 இடங்களிலும் உழவர் சந்தைகள் மூடப்பட்டுள்ளன. ஆனால் பெரம்பலூர் உழவர் சந்தை தற்போதும் செயல்பட்டு வருகிறது. அதாவது பெரம்பலூர் மாவட்டத்தில் முதன்முதலில் கடந்த 2000-ம் ஆண்டு மே மாதம் 7-ந்தேதி பெரம்பலூர்-வடக்கு மாதவி சாலையில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பெரம்பலூர் மதனகோபாலசுவாமி மற்றும் பிரம்மபுரீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான சுமார் 40 சென்ட் நிலத்தில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் கீழ் உழவர் சந்தை அமைக்கப்பட்டு திறக்கப்பட்டது. இந்த சந்தை தினமும் காலை 6.15 மணி முதல் மதியம் 12 மணி வரை திறக்கப்படுகிறது. உழவர் சந்தையில் விவசாயிகள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுவை சேர்ந்தவர்கள் அமர்ந்து காய்கறிகள் விற்பனை செய்ய 74 கடைகள் உள்ளது. மேலும் பண்டிகை காலங்களில் அதிக அளவில் விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை இங்கு கொண்டு வந்து விற்பனை செய்வார்கள்.
இந்த உழவர் சந்தைக்கு பெரம்பலூர், வேப்பந்தட்டை, ஆலத்தூர் ஆகிய தாலுகாக்களில் உள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தங்களது விளை நிலத்தில் சாகுபடி செய்த காய்கறிகளை கொண்டு வந்து வியாபாரம் செய்து வருகின்றனர். பெரம்பலூர் நகர்ப்பகுதியில் பெரும்பாலானோரும் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்தவர்களும் தினமும் உழவர் சந்தைக்கு வந்து காய்கறிகளை வாங்கி செல்கின்றனர்.
குடிநீர் வசதி இல்லை
பெரம்பலூர் உழவர் சந்தையில் காய்கறிகள் வாங்க வந்த தில்லைநகரை சேர்ந்த ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் ராஜேந்திரன்:-
உழவர் சந்தையில் விவசாயிகள் தங்களது விளை நிலத்தில் சாகுபடி செய்த காய்கறிகளை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். உழவர் சந்தையில் காய்கறிகள் வெளிமார்க்கெட்டை விட விலை குறைவாக உள்ளதாலும், தரமாகவும் உள்ளதாலும் பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து தங்களுக்கு தேவையான காய்கறிகளை தேர்வு செய்து வாங்கி, மனதிருப்தியோடு சென்று வருகின்றனர். சுத்தமான தேங்காய் எண்ணெய் இங்கு கிடைக்கிறது. மேலும் மலைப்பயிர்களும் கிடைக்கிறது. உழவர் சந்தையில் குடிநீர் வசதி இல்லை. அதனை ஏற்படுத்தி தந்தால் நன்றாக இருக்கும். மேலும் உழவர் சந்தையை விரிவுபடுத்த வேண்டும். உழவர் சந்தை அமைந்துள்ள பெரம்பலூர்-வடக்கு மாதவி சாலை போக்குவரத்து நெரிசலில் தினமும் சிக்கித்தவிக்கிறது. போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டும்.
மேலும் ஒரு உழவர் சந்தை
பெரம்பலூர் ரோஜா நகரை சேர்ந்த விஜயலட்சுமி:-
பெரம்பலூர் உழவர் சந்தை நகர்ப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வரப்பிரசாதமாக உள்ளது. உழவர் சந்தைக்கு வந்தால் அனைத்து காய்கறிகளும் வாங்கி கொள்ளலாம். வீட்டு விசேஷத்துக்கும் கூட மொத்தமாக காய்கறிகள் வாங்க வாய்ப்புள்ளது. காய்கறிகளும் அனைத்து விவசாயிகளிடமும் ஒரே விலையில் கிடைக்கிறது. விலைப்பட்டியல் பதாகை கடை முன்பு வைக்கப்பட்டுள்ளது. நகர்ப்பகுதியில் மேலும் ஒரு உழவர் சந்தை இருந்தால் பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
உழவர் சந்தையில் காய்கறிகள் விற்பனை செய்யும் பெண் விவசாயி கவிதா:-
தம்பிரான்பட்டியில் இருந்து தினமும் காய்கறிகளை கொண்டு வந்து விற்பனை செய்கிறேன். இந்த சந்தையின் மூலம் விவசாயிகளுக்கு ஓரளவு போதிய வருமானம் கிடைக்கிறது. விற்பனை நேரம் முடிந்தவுடன் மீண்டும் விளை நிலத்துக்கு சென்று விவசாயம் பார்க்கிறோம். உழவர் சந்தையில் கழிவறையை அகற்றி புதிதாக கட்ட வேண்டும். உழவர் சந்தைக்கு முன்பு தினசரி மார்க்கெட் வியாபாரிகள் ஆக்கிரமித்து கொண்டு வியாபாரம் செய்வதால் விவசாயிகளின் வியாபாரம் பாதிக்கிறது. இதனை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மொத்தத்தில் உழவர் சந்தைகள் புத்துயிர் பெற்று சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.