ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வினியோகிக்கப்படுமா?

விலை விழ்ச்சியால் கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வினியோகிக்கப்படுமா? என விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள்.

Update: 2023-07-30 19:53 GMT

விலை விழ்ச்சியால் கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வினியோகிக்கப்படுமா? என விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள்.

தென்னை விவசாயம்

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை, பேராவூரணி, சேதுபாவாசத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் தென்னை விவசாயம் பிரதானமாக நடைபெற்று வருகிறது. இங்கு விளையும் தேங்காய்களுக்கு உலகம் முழுவதும் வரவேற்பு உண்டு. இந்த நிலையில் தேங்காய் விலை வீழ்ச்சியால் பட்டுக்கோட்டை, பேராவூரணி பகுதியை விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

விலை வீழ்ச்சியை சமாளிக்க அரசே உரிய விலை நிர்ணயித்து தேங்காயை கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகிறார்கள். இதுபோன்ற கோரிக்ைககளை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களும் நடந்து வருகின்றன. இந்த நிலையில் விலை வீழ்ச்சியால் ஏற்படும் நஷ்டத்தை தவிர்க்க தேங்காயை ரேஷன் கடைகளில் வினியோகம் செய்ய வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள்.

இதுகுறித்து ஈஸ்ட் கோஸ்ட் தென்னை விவசாயிகள் சங்க தலைவர் காந்தி கூறியதாவது:-

நடவடிக்கை இல்லை

தென்னை விவசாயிகளின் கோரிக்கைகள் தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் எந்த நடவடிக்கைகளும் எடுக்கவில்லை. எனவே கோரிக்கையை வலியுறுத்தும் விதமாக தென்னை விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதில் தேங்காய்களை பொது இடத்தில் போட்டு உடைப்பது போன்றவற்றில் ஈடுபடுகிறார்கள்.

இதை தவிர்த்து சாலையோரத்தில் தேங்காய்களை குவித்து வைத்து தேவைப்படுபவர்களை இலவசமாக எடுத்துக்கொள்ள சொல்லலாம். இதனால் பலருக்கும் உபயோகமாக இருக்கும்.

குறைந்தபட்ச ஆதார விலை

எந்த ஒரு பொருளுக்கும் குறைந்த பட்ச ஆதார விலை (எம்.எஸ்.பி.) என்பது, மத்திய அரசு அந்த விளை பொருளின் உற்பத்தி செலவு, சந்தை மதிப்பு போன்றவற்றை நன்கு ஆய்வு செய்தே வெளியிடுகிறது. அதற்கு குறைத்து விற்றால் விவசாயிக்கு கட்டுப்படியாகாது. அதனால்தான் தற்போது தேங்காய் கொப்பரை ஒரு கிலோ ரூ.108.60 என விலை நிர்ணயம் செய்து மத்திய அரசே கொள்முதல் செய்கிறது.

ஆனால் கொள்முதல் செய்த கொப்பரை மத்திய அரசு, கிட்டங்கிகளில் சேமித்து வைத்து 4, 5 மாதங்களுக்குப் பிறகு அவற்றை பெரும் நஷ்டத்தில், மிகப்பெரிய கார்ப்பரேட் கம்பெனிக்கு டென்டர் மூலம் விற்பனை செய்கிறது. அந்த கொப்பரை தேங்காய் காலதாமதத்தால், நிறம் மாறி, தரம் குறைந்து போவதால் சுமார் 30 சதவீத விலை குறைவாகவே, அதாவது ஒரு கிலோ ரூ.75 என்ற அளவிலே விற்கப்படுகிறது.

தேங்காய் எண்ணெய்

பிறகு அதுவே சந்தை விலை என்றாகி, விவசாயிகளிடமிருந்து அடிமட்ட விலைக்கு தேங்காய் வாங்கப்படுகிறது. குறைந்தபட்ச ஆதார விலையை மத்திய அரசு நிர்ணயித்து விட்டு, காலதாமதமாக விற்பதால் தேங்காய் விலை வீழ்ச்சி அடைகிறது. இதனைத் தடுத்து நிறுத்த வேண்டும்.

மாநில அரசு, முதலில் 5 மாவட்டங்களில் பொது வினியோகத் திட்டத்தில் ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்கப்படும் என்றும், பிறகு படிப்படியாக எல்லா மாவட்டங்களிலும் ரேஷன் கடைகள் மூலம் தேங்காய் எண்ணெய் வினியோகிக்கப்படும் என்று அறிவித்து இருந்தது. இதை செயல்படுத்த வேண்டும். இதுதொடர்பான அனைத்து தென்னை விவசாயிகளும் வலியுறுத்த வேண்டும்.

இதுபோல் மிக முக்கியமான கோரிக்கைகளை, அனைத்துச் சங்கங்களும் ஒரேபோல் முன் வைக்க வேண்டும். இதற்கு அனைத்து தென்னை விவசாய சங்கங்களும், ஒரு கூட்டமைப்பாக செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்