கோவை, ஈரோடு பிரிவு சாலை பகுதியில் சிக்னல் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

திருக்காம்புலியூர் ரவுண்டானாவில் அடிக்கடி நடக்கும் விபத்தை தடுக்க கோவை, ஈரோடு பிரிவு சாலை பகுதியில் சிக்னல் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா? என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்து உள்ளனர்.

Update: 2023-06-18 18:35 GMT

கோவை-ஈரோடு பிரிவு சாலை

கரூரில் இருந்து கோவை, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளுக்கு தினமும் ஆயிரக்கணக்கான இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள், பஸ், லாரி, வேன் உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில் கரூரில் இருந்து கோவை, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் அனைத்தும் திருக்காம்புலியூர் ரவுண்டானா வழியாக சென்று முனியப்பன் கோவில் அருகேயுள்ள சாலையில் பிரிந்து செல்கின்றன.

இதேபோல், ஈரோடு, கோவை போன்ற பகுதிகளில் இருந்து கரூர் நோக்கி வரும் அனைத்து வாகனங்களும் முனியப்பன் கோவில் அருகே வந்து ஒரே சாலையில் இணைந்து திருக்காம்புலியூர் ரவுண்டானா வந்து கரூர் நோக்கி வருகின்றன.

உயர்மின் கோபுரம்

கோவை, ஈரோடு பிரிவு சாலையில் 24 மணி நேரமும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதால், இந்த பிரிவு சாலை முக்கிய இடமாக உள்ளது. இந்நிலையில் கோவை, ஈரோடு பகுதிகளுக்கு செல்லும் வாகனங்களும், கோவை, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கரூர் வரும் வாகனங்களும் முனியப்பன் கோவில் பகுதியில் ஒரே இடத்தில் சந்தித்து பிரிந்து செல்லும் போது, அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.

மேலும் வாகன விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன. இந்த பிரிவு சாலை பகுதியில் உயர்மின் கோபுரம் இல்லாமல் உள்ளது. இதனால் இரவில் கோவை, ஈரோடு பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள் சென்டர் மீடியன் பகுதியில் மோதி சிறு, சிறு விபத்துகள் உண்டாகும் நிலை உள்ளது. மேலும் சென்டர் மீடியன் பகுதியில் ஒளிரும் ஸ்டிக்கர்கள் இல்லாமல் இருக்கிறது.

சிக்னல் அமைக்க வேண்டும்

கோவை-ஈரோடு பிரிவு சாலையில் பல மாதங்களுக்கு முன்பு போக்குவரத்து சிக்னல் அமைக்கப்பட்டு, செயல்பட்டு வந்தது. தற்போது அந்த சிக்னல் செயல்படாமல் உள்ளது. இதனால் அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகின்றது. இப்பகுதியில் போக்குவரத்து சிக்னல் இல்லாததால் வாகனங்கள் அனைத்தும் சாலையில் தாறுமாறாக சென்று வருகின்றன.

இதனால் வாகனங்களில் அப்பகுதியில் செல்பவர்கள் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். இப்பகுதியில் சிக்னல் அமைத்து போக்குவரத்தினை ஒழுங்குப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதன்விவரம் பின்வருமாறு:-

ரவுண்டானா அமைக்க வேண்டும்

ரஞ்சித்குமார்:-

இந்த பிரிவு சாலையில் 24 மணி நேரமும் போக்குவரத்து நெரிசல் இருந்து கொண்டே இருக்கிறது. முன்பு இப்பகுதியில் போக்குவரத்து சிக்னல் அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் சில நாட்களுக்கு பிறகு செயல்படாமல் போய்விட்டது. தற்போது இப்பகுதியில் போக்குவரத்து சிக்னல் இல்லாமல் இருக்கிறது. போக்குவரத்து போலீசார் காலை மற்றும் மாலை நேரங்களில் இப்பகுதியில் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இரவில் போக்கு வரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் உடனடியாக போக்குவரத்து சிக்னல் அமைக்க வேண்டும். மேலும் ரவுண்டானா அமைத்தால் கூட நன்றாக இருக்கும். இதனால் போக்குவரத்து நெரிசல் குறைய வாய்ப்பிருக்கிறது. எனவே இப்பகுதியில் ரவுண்டானாவுடன் சிக்னல் அமைக்க வேண்டும்.

ஒளிரும் ஸ்டிக்கர்கள்

முருகேசன்:- கோவை, ஈரோடு பிரிவு சாலை பகுதியில் எந்நேரமும் போக்குவரத்து நெரிசல் இருந்து கொண்டே இருக்கும். ஆனால் இப்பகுதியில் மின்விளக்கு வசதி இல்லாமல் இருட்டாக இருக்கிறது. இதனால் இரவு நேரத்தில் கோவை சாலையில் இருந்து வரும் வாகனங்கள் சென்டர் மீடியனில் மோதி விபத்து ஏற்படும் நிலை உள்ளது. எனவே இப்பகுதியில் உயர்மின் கோபுரம் அமைக்க வேண்டும். இதைபோல் இந்த பிரிவு சாலை பகுதியில் ஒளிரும் ஸ்டிக்கர்கள் இல்லாமல் இருக்கிறது. ஒளிரும் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட வேண்டும். இதனால் இரவில் வரும் வாகன ஓட்டிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். மேலும் இப்பகுதியில் தாறுமாறாக செல்லும் வாகனங்கள் நின்று பிரிந்து செல்லும் வகையில் ரவுண்டானா அமைத்தால் நன்றாக இருக்கும், முக்கியமாக உடனடியாக சிக்னல் அமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்.

வேகத்தடை

ராஜலிங்கம்:-

இந்த பிரிவு சாலையில் கண்டிப்பாக சிக்னல் அமைக்க வேண்டும். மேலும் இந்த 3 சாலை பிரிவுகளிலும் வேகத்தடை அமைக்க வேண்டும். இதனால் அப்பகுதியை கடந்து செல்லும் வாகனங்கள் வேகத்தை குறைத்து மெதுவாக செல்லும் நிலை உருவாகும். இதேபோல் இந்த சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனைசரி செய்து சாலையை ஒழுங்குப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்