வேலூர் புதிய பஸ்நிலையத்தில் உடனடியாக புறக்காவல் நிலையம் அமைக்கப்படுமா?

Update: 2023-02-22 12:29 GMT

வேலூர் புதிய பஸ்நிலையத்தில் செல்போன் பறிக்கும் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே அங்கு உடனடியாக புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதிய பஸ்நிலையம்

வேலூர் புதிய பஸ்நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.53 கோடியே 13 லட்சத்தில் நவீன வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்டது. இங்கு ஒரேநேரத்தில் 84 பஸ்கள் நிற்கும் வசதி, 24 கண்காணிப்பு கேமராக்கள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், ஆண், பெண் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 6 கழிவறைகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

இதனை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஜூன் மாதம் திறந்து வைத்து, பஸ் போக்குவரத்தையும் தொடங்கி வைத்தார்.

புதிய பஸ்நிலையத்தில் இருந்து ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரசு, தனியார் பஸ்கள் மற்றும் தென்மாவட்டங்களுக்கு அரசு விரைவு பஸ்கள் தினமும் இயக்கப்பட்டு வருகின்றன. கல்வி, தொழில், மருத்துவம், ஆன்மிகம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்காக பல்வேறு மாவட்டங்கள், பிற மாநிலங்களை சேர்ந்த ஏராளமானோர் பஸ்களில் வேலூருக்கு வந்து செல்கின்றனர்.

திறக்கப்படாத கடைகள்

பஸ்நிலையம் திறந்து 8 மாதங்களாகியும் கடைகள் திறக்கப்படாததால் பொதுமக்கள் உணவு பொருட்கள், மருந்து, டீ, காபி உள்ளிட்ட அவசர அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இதற்கு ஏற்கனவே பஸ்நிலையத்தில் கடை வைத்திருந்தவர்களுக்கு குலுக்கல் முறையில் கடைகள் ஒதுக்கப்பட்டதாகவும், அதில் சிலருக்கு முதல்மாடியில் கடைகள் கிடைத்துள்ளன.

அதனை ஏற்காத அவர்கள் தங்களுக்கு தரைதளத்தில் கடைகள் ஒதுக்க வேண்டும் என்று கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அதனால் கடைகள் ஏலம் விடப்படவில்லை. கோர்ட்டில் உள்ள வழக்கில் விரைவில் தீர்வு காணப்படும். அதன்பின்னர் உடனடியாக கடைகள் ஏலம் விடப்படும் என்று மாநகராட்சி தரப்பில் கூறப்படுகிறது.

தென்மாவட்ட பக்தர்கள்

பஸ்நிலையத்தில் கடைகள் இல்லாததால் அவதிப்படும் பயணிகளின் செல்போன் மற்றும் உடைமைகளும் சமீபகாலமாக திருட்டு போவது அதிகரித்துள்ளது. இதற்கு அங்கு புறக்காவல் நிலையம் இல்லாதது மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபடாதது காரணம் என்று கூறப்படுகிறது.

தமிழகத்தின் தென்பகுதியில் உள்ள மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் தினமும் ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக வருகிறார்கள்.

இவ்வாறாக வரும் பக்தர்கள் அடிக்கடி ரெயில் வசதி இல்லாததால் விரைவு பஸ்சில் திருப்பதிக்கு செல்கிறார்கள். கோவில் வளாகத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்து ஏழுமலையானை தரிசனம் செய்து விட்டு பக்தர்கள் நள்ளிரவில் வேலூருக்கு வருவதை காணலாம். பின்னர் இங்கிருந்து திருச்சிக்கு இயக்கப்படும் பஸ்சில் பெரும்பாலானோர் பயணித்து தங்கள் சொந்த ஊருக்கு செல்கின்றனர்.

செல்போன் திருட்டு

திருப்பதிக்கு குடும்பத்துடன் வரும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துவிட்டு அதன்பின்னர் வேலூர் கோட்டை, ஸ்ரீபுரம் தங்கக்கோவில் உள்ளிட்ட இடங்களை சுற்றிப்பார்க்க வேண்டும் என்ற ஆசையுடன் வருகின்றனர். ஆனால் திருப்பதியில் இருந்து நள்ளிரவில் வேலூருக்கு வரும் தென்மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் உரிய திட்டமிடல் இல்லாததால் தங்கள் உடைமைகளுடன் பஸ் நிலையத்தில் படுத்து தூங்குகின்றனர். சிறிதுநேரம் கண்அயர்ந்து காலையில் எழுந்து குளித்து விட்டு தங்கக்கோவிலை சுற்றிப்பார்த்து சாமி தரிசனம் செய்வதற்காக செல்கிறார்கள். இவர்களை போன்று பஸ்நிலையத்தில் ஓய்வெடுக்கும் மற்றும் பஸ்சிற்காக காத்திருக்கும் பயணிகளை குறி வைத்து மர்மநபர்கள் செல்போன் திருட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதைத்தவிர பஸ்நிலையத்துக்கு வரும் பஸ்களில் பயணிகள் முண்டியடித்து ஏறும் சமயத்தில் கூட்டநெரிசலில் ஏறுவது போன்று மர்மநபர்கள் செல்போனை திருடி செல்வதாக புகார்கள் எழுந்துள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்பாக சேலத்தில் இருந்து வேலை விஷயமாக வேலூருக்கு வந்த தனியார் நிறுவன ஊழியர் மீண்டும் பஸ்சில் சேலம் செல்ல முயன்றார். சேலம் பஸ்சில் ஏறியபோது பின்னால் ஏறிய மர்மநபர்கள் கூட்டநெரிசலை பயன்படுத்தி தனியார் நிறுவன ஊழியர் பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த ஸ்மார்ட்போனை திருடி சென்றனர். இதுகுறித்து அவர் பஸ்நிலையத்தில் உள்ள போலீசாரிடம் புகார் தெரிவிக்க முயன்றார். ஆனால் பஸ்நிலையத்தில் போலீசாரோ, புறக்காவல்நிலையமோ இல்லை. அவசர வேலைகாரணமாக அவர் போலீசில் புகார் அளிக்காமல் சேலத்துக்கு சென்று விட்டார்.

புறக்காவல் நிலையம்

இதேபோன்று பஸ்நிலையத்தில் செல்போன் மற்றும் உடைமைகளை பறிகொடுக்கும் பயணிகள் புறக்காவல் நிலையம் இல்லாத காரணத்தால் உடனடியாக புகார் அளிக்க முடியாத நிலை உள்ளது. செல்போன், உடைமைகள் திருட்டு, பணம் பறிப்பு தொடர்பாக வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் தான் புகார் அளிக்க முடியும். வெளியூரை சேர்ந்த பயணிகளுக்கு வடக்கு போலீஸ் நிலையம் எங்கு உள்ளது என்றும், அங்கு செல்வதற்கான வழியும் தெரியாது. மேலும் குடும்பத்துடன் வந்திருந்தால் அவர்களை அழைத்து கொண்டு போலீஸ் நிலையம் செல்ல வேண்டுமா என்று பலர் புகார் அளிக்காமல் செல்போன், உடைமைகளை இழந்த வேதனையுடன், காவல்துறையில் புகார் அளிக்க முடியவில்லையே என்ற கவலையுடன் சொந்த ஊருக்கு பயணிக்கும் நிலை காணப்படுகிறது.

வேலூர் மாவட்டத்தில் எப்போதும் பயணிகள் நடமாட்டம் காணப்படும் வேலூர் புதிய பஸ்நிலையத்தில் 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பு, கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும். ஆனால் தற்போது அங்கு பெரும்பாலான நேரங்களில் போலீசார் இருப்பதில்லை. அதனால் பஸ்நிலையத்தில் மர்மநபர்களின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. அவர்கள் பஸ்சுக்காக காத்திருக்கும் பிறமாவட்டங்கள், வெளிமாநில பயணிகளை குறிவைத்து செல்போன் திருட்டில் ஈடுபடுகின்றனர். இவற்றை தடுக்க அங்கு உடனடியாக புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் என்பது பயணிகளின் கோரிக்கையாகும்.


மேலும் செய்திகள்