மதுரை-கோவை எக்ஸ்பிரஸ் ரெயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுமா?
பழனி வழியாக செல்லும் மதுரை-கோவை எக்ஸ்பிரஸ் ரெயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்க வேண்டும் என பக்தர்கள், பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.
பழனி முருகன் கோவில்
அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடாக திகழும் பழனி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய தினமும் ஏராளமானோர் வருகை தருகின்றனர். இதில் பெரும்பாலான பக்தர்கள் பஸ், ரெயில் மூலமாகவே வருகிறார்கள்.
குறிப்பாக கேரளா, கர்நாடகா போன்ற வெளிமாநில பக்தர்கள் ரெயில் மூலம் பழனிக்கு வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். எனவே பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வசதிக்காக பழனி வழியாக கோவை, பாலக்காடு, சென்னை, திருச்செந்தூர் ஆகிய பகுதிகளுக்கு தினமும் ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழா காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் பழனியில் சாமி தரிசனம் செய்ய படையெடுத்து வருவார்கள். எனவே திருவிழா காலங்களில் ரெயில்வே நிர்வாகம் சார்பில் திருச்சி, கோவை, மதுரைக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.
கூடுதல் பெட்டிகள்
அதேநேரத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் பக்தர்களின் வருகைக்கு ஏற்ப பழனிக்கு தினமும் கூடுதல் ரெயில்களை இயக்க வேண்டும், ரெயில்நிலையத்தில் போதிய அடிப்படை வசதிகள் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக இருந்து வருகிறது.
குறிப்பாக சில ரெயில்களில் கூடுதல் பெட்டிகளாவது இணைக்க வேண்டும் என பயணிகள், பக்தர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். அந்தவகையில் கோவை-மதுரை இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கோவை, மதுரை பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் பழனிக்கு வருகின்றனர்.
அலைமோதும் கூட்டம்
இதுமட்டுமின்றி பொள்ளாச்சி, திண்டுக்கல், உடுமலை பகுதி பொதுமக்களும் அதிகளவில் பயனடைகின்றனர். இதனால் தினமும் இந்த ரெயில்களில் கூட்டம் அலைமோதுகிறது. அதிலும் வார விடுமுறை நாட்கள், விசேஷ நாட்களில் இந்த ரெயிலில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழியும்.
அப்போது ரெயிலில் நின்று செல்ல கூட முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால் முதியோர், குழந்தைகள் கடும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.ரெயிலில் இருக்கைகள் கிடைக்காததால், பஸ்கள் மூலம் தங்கள் ஊருக்கு திரும்பி செல்கின்றனர்.
எனவே மதுரை-கோவை எக்ஸ்பிரஸ் ரெயிலில் கூடுதல் பெட்டிகளை இணைக்க வேண்டும், பகல் நேரங்களில் பழனி-திருச்சிக்கு ரெயில் இயக்க வேண்டும் என பக்தர்கள், பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கான முயற்சியில் ரெயில்வே நிர்வாகம் ஈடுபடுமா? என்பதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும் என்று பக்தர்கள் காத்திருக்கின்றனர்.