ஆதார் மையங்கள் அதிகரிக்கப்படுமா?-பொதுமக்கள் எதிர்பார்ப்பு

நீண்ட நேரம் காத்திருக்கும் அவலம் இருப்பதால் ஆதார் மையங்கள் அதிகரிக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Update: 2023-06-08 19:00 GMT

இந்திய மக்களுக்கான ஒரு தனித்துவ அடையாள அட்டையாக ஆதார் அடையாள அட்டை விளங்கி வருகிறது. தற்போது இந்த ஆதார் அடையாள அட்டை வங்கி கணக்கு, மின் இணைப்பு உள்ளிட்ட மக்களோடு அடிப்படை தொடர்பில் அனைத்திலும் இணைக்கப்பட்டு உள்ளது. ஆதார் அடையாள அட்டையில் உள்ள முகவரி, பெயர் உள்ளிட்டவற்றில் எந்தவித தவறும் இல்லாமல் வைத்துக் கொள்வது மிகவும் முக்கியமானதாக உள்ளது. இதே போன்று தமிழக அரசின் சார்பில் வழங்கப்படும் பல்வேறு சான்றிதழ்களும் ஆன்லைன் மூலமாகவே வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக பொது சேவை மையங்கள், இ-சேவை மையங்கள் அமைக்கப்பட்டு இயங்கி வருகின்றன.

10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆதார் அடையாள அட்டை விவரங்களை புதுப்பித்தல், 5 வயது குழந்தைகளுக்கு அடையாள அட்டையை புதுப்பித்தல் போன்ற பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றன. திருத்தங்களும் அதிக அளவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால் ஆதார் மையங்களின் தேவை அதிகரித்து வந்தது. தாலுகா அலுவலகங்கள், தபால் அலுவலகங்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் ஆதார் மையங்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.

உயர் கல்வி படிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு கேபிள் டி.வி. நிறுவனம் சார்பில் அனைத்து தாலுகா அலுவலகத்திலும் மொத்தம் 10 இ-சேவை மையம் அமைக்கப்பட்டு உள்ளன. அதே போன்று எல்காட் நிறுவனம் சார்பில் 6 இ-சேவை மையங்கள் இயங்கி வருகின்றன. இதேபோல் நெல்லை மாவட்டத்தில் அரசு கேபிள் டி.வி. நிறுவனம் சார்பில் 7 தாலுகா அலுவலகங்களில் இ-சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. எல்காட் நிறுவனத்தின் சார்பில் 6 இ-சேவை மையங்கள் இயங்கி வருகின்றன.

தற்போது பள்ளி மாணவ-மாணவிகள் உயர்கல்வி படிப்பதற்கான விண்ணப்பங்களை அனுப்பும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பலர் இடமாறுதல் ஆகி இருப்பதாலும், பெயர்களில் திருத்தம் இருப்பதாலும் விண்ணப்பங்களை அனுப்புவதில் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். இதனால் மாணவ-மாணவிகள் தங்கள் பெற்றோருடன் அதிக அளவில் இ-சேவை மையங்கள், தபால் நிலையங்களை நோக்கி படையெடுத்து வருகின்றனர். கிராமப்புறங்களில் இருந்தும் அதிக அளவில் மக்கள் வருகின்றனர். ஆனால், போதுமான ஆதார் மையங்கள் இல்லாததால் மக்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டு உள்ளது. நாள் முழுவதும் ஆதார் அட்டை திருத்தம் மேற்கொள்வதற்காக மக்கள் காத்து இருக்கின்றனர். இதுபோன்ற அத்தியாவசிய மற்றும் அவசர தேவையாக உள்ள நேரங்களில் கூடுதல் ஆதார் மையங்களை அரசு திறக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனர். அதன் விவரம் வருமாறு:-

நிரந்தர பணியாளர்கள்

தூத்துக்குடியை சேர்ந்த இ.சுரேஷ்:-

ஆதார் அடையாள அட்டை- ரேஷன் கார்டு, வங்கி கணக்கு, மின் இணைப்பு, விவசாய கடன் உள்ளிட்ட அனைத்து விஷயங்களுக்கும் அதிகாரப்பூர்வமான ஆவணமாக மாறிவிட்டது. பள்ளி, கல்லூரி சேர்க்கைக்கும் ஆதார் அட்டை அவசியமாகிறது. இதனால் ஆதார் அடையாள அட்டையில் தவறுகள் இன்றி சரியாக வைப்பது அவசியம். ஏற்கனவே வழங்கப்பட்ட அடையாள அட்டைகளில் பல தவறுகள் இருந்தன. அதனை தற்போது பெரும்பாலான மக்கள் திருத்தி வருகின்றனர். இதனால் அதிக அளவில் மக்கள் ஆதார் மையங்களுக்கு சென்று வருகின்றனர். ஆனால், ஆதார் மையங்கள் போதுமானதாக இல்லை.

அரசு அலுவலகங்களில் செயல்படும் ஆதார் மையங்களில் ஒப்பந்த அடிப்படையிலான ஊழியர்களே பணியில் இருக்கிறார்கள். அங்கு நிரந்தர பணியாளர் இருந்தால் கூடுதல் நேரம் மையத்தை திறந்து வைக்க முடியும். தபால் நிலையங்களில் ஒருவர் மட்டுமே இருந்து பணிகளை மேற்கொள்கிறார். இதனால் அதிக அளவில் மக்கள் வரும் போது, அந்த ஊழியரால் சமாளிக்க முடியாத நிலை இருக்கிறது. ஆகையால் கூடுதல் ஆதார் சேவை மையங்களை அமைக்கவும், கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாள் முழுவதும் காத்திருப்பு

தூத்துக்குடியை சேர்ந்த மகராஜன்:-

ஆதார் அடையாள அட்டை தற்போது அத்தியாவசியமானதாக மாறிவிட்டது. வாடகை வீடுகளில் வசிப்பவர்கள் வெவ்வேறு வீடுகளுக்கு மாறி இருக்கலாம். அவர்களின் வீட்டு முகவரி ஆதார் அட்டையில் மாறி இருக்கலாம். அதுபோன்ற நிலையில் முகவரி திருத்தம் மேற்கொள்வதற்காகவும், பெயர்களில் உள்ள பிழைகளை திருத்தம் செய்வதற்காகவும் பலர் இ-சேவை மையங்களுக்கு செல்கின்றனர். ஆனால் அங்கு அதிக அளவில் கூட்டம் இருப்பதால், நாள் முழுவதும் காத்துகிடக்கின்றனர். மக்களுக்கு விரைவாக சேவை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக கூடுதல் கவுண்ட்டர்கள் அல்லது மையங்கள் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கூடுதல் மையங்கள்

தூத்துக்குடியை சேர்ந்த வக்கீல் செல்வம் கிறிஸ்டோபர்:-

ஆதார் அட்டை என்பது ஒரு முக்கிய அடையாள ஆவணமாக இருக்கிறது. நமது வாழ்க்கையில் எந்த ஒரு செயலை செய்வதற்கும், மத்திய-மாநில திட்டங்களின் நன்மைகளைப் பெறுவதற்கும் ஆதார் அட்டை அவசியமாகும். ஆதார் அட்டையில் நமது பெயர், புகைப்படம், பிறந்த தேதி, முகவரி மட்டுமல்லாமல் நமது அங்க அடையாளங்களும் குறிப்பிடப்பட்டிருக்கும். இந்த தகவல்கள் ஆரம்ப கட்டத்தில் பல்வேறு குளறுபடிகளுடன் வந்து உள்ளன. ஆனால் தற்போது ஆதார் முக்கியமானதாக இருப்பதால், அதில் உள்ள விவரங்கள் அனைத்தும் சரியாக வைத்து இருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டு உள்ளது. இதனை மக்கள் உணர்ந்து உள்ளனர். இதனால் மக்கள் ஆதார் சேவை மையங்களுக்கு சென்று தங்கள் ஆதார் அடையாள அட்டைகளில் உள்ள பிழைகளை சரிசெய்து வருகின்றனர். இந்த சேவை முழுவதும் ஆன்லைன் மூலம் நடப்பதால், இன்டர்நெட் சேவை நல்ல முறையில் இயங்கினால் மட்டுமே ஆதார் பதிவுகள் வேகமாக நடக்கிறது. இல்லையென்றால் மக்கள் நீண்ட நேரமாக காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. ஆகையால் கூடுதல் இ-சேவை மையங்களை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதிகாரிகள் விளக்கம்

தூத்துக்குடியை சேர்ந்த அரசு அதிகாரிகள் கூறியதாவது:-

தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு கேபிள் டி.வி நிறுவனம் மற்றும் எல்காட் நிறுவனங்கள் சார்பில் இ-சேவை மையங்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. கேபிள் டி.வி நிறுவனம் சார்பில் 10 தாலுகா அலுவலகங்களிலும் இ-சேவை மையங்கள் இயங்கி வருகின்றன. எல்காட் நிறுவனம் சார்பில் காயல்பட்டினம், கோவில்பட்டி, தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் 6 இ-சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. தற்போது இந்த இ-சேவை மையங்களை பொதுமக்கள் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். அதேபோன்று தபால் நிலையங்கள், வங்கிகளிலும் ஆதார் மையங்கள் இயங்கி வருகின்றன. ஆனால் மக்கள் அதிக அளவில் தாலுகா அலுவலகங்களுக்கு வருகின்றனர். மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தால் கூடுதல் கவுண்ட்டர்கள் அமைக்க சென்னை அரசு கேபிள் டி.வி. நிறுவனத்துக்கு பரிந்துரை செய்தால், கூடுதல் கவுண்ட்டர்கள் அமைக்க அனுமதி அளிக்கப்படும். ஆகையால் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள இ-சேவை மையங்களில் கூட்டம் அதிகம் உள்ள இடங்களில் கூடுதல் கவுண்ட்டர்கள் அமைப்பதற்கு பரிந்துரை செய்யப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

அதிக நேரம் செயல்பட...

பாளையங்கோட்டையை சேர்ந்த கல்கிராஜா:-

ஆதார் அட்டையில் ஒரு சிறிய தவறு இருந்தால் கூட வங்கி கணக்கு தொடங்க முடியவில்லை. வருங்கால வைப்பு நிதி தொகை பெற முடியவில்லை. எந்தவித அரசு உதவிகளும் பெற முடியவில்லை. இதனால் தான் ஆதாரில் தவறை திருத்துவதற்கு மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. ஆதார் ைமயங்களில் முன்பு பெயர் திருத்தம் எளிதாக இருந்தது. தற்போது திருத்தம் செய்வதில் அதிக பிரச்சினைகள் உள்ளது. இதை எளிமைப்படுத்த வேண்டும். ஆதார் மையங்கள் அதிகம் தொடங்க வேண்டும். கல்லூரிக்கு விண்ணப்பம் செய்தல் மற்றும் சாதி சான்றிதழ் பெறுதல் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் இ-சேவை மையங்களில் செய்வதால் அந்த மையங்கள் அதிக நேரம் செயல்பட வேண்டும்.

மத்திய அரசின் கட்டுப்பாட்டில்

பத்திர எழுத்தர் ராமகிருஷ்ணன்:-

ஆதார் அட்டை அனைத்து ஆவணங்களுக்கும் முக்கியமாகிவிட்டது. ஆதார் இருந்தால்தான் மின் இணைப்பு, விவசாய கடன் பெற முடியும் என்று ஆகிவிட்டது. இந்த ஆதார் அட்டையில் முன்பு பிறந்த தேதி இல்லாமல் வருடத்தை மட்டும் போட்டு எடுத்து விட்டார்கள். ஆனால் தற்போது நமது பள்ளிக்கூட மாற்றுச் சான்றிதழ், நாம் ஒரு அலுவலகத்தில் கொடுத்த சான்றிதழில் நமது பிறந்த தேதியும் ஆதார் அட்டையில் உள்ள பிறந்த தேதியும் ஒன்றாக இருக்க வேண்டும். பெயரில் ஒரு எழுத்துக்கூட மாறினால் அந்த பண பலன்களை நாம் பெற முடியாது. இதனால்தான் ஆதாரில் திருத்தம் செய்வதற்கு மக்கள் அதிகம் அளவில் முயற்சி செய்கிறார்கள். இதன் காரணமாக ஆதார் ைமயங்களில் கூட்டம் அதிகமாக உள்ளது. இதை உடனே சரிசெய்து கொடுக்க அரசு ஆவன செய்ய வேண்டும். மத்திய அரசின் கட்டுப்பாட்டில் ஆதார் இருப்பதால் அதை சரிசெய்வதில் பல சிக்கல்கள் உள்ளது. இதை சரிசெய்து கொடுக்க வேண்டும்.

பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

தென்காசி அருகே உள்ள மேலகரத்தைச் சேர்ந்த காளிராஜா:-

அரசு அனுமதி பெற்ற இ-சேவை மையங்கள் மற்றும் தாலுகா அலுவலகம், நகராட்சி அலுவலகம் போன்றவற்றில் ஆதார் திருத்தங்கள் மற்றும் புதிய ஆதார் அட்டைகள் எடுப்பதற்கு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. ஆனால் எங்கெல்லாம் இந்தப் பணிகள் நடைபெறுகின்றன என்பது பெரும்பாலான பொது மக்களுக்கு தெரிவதில்லை. இதுகுறித்து பொதுமக்களுக்கு தெரியும் அளவில் அரசு விளம்பரம் செய்ய வேண்டும். மேலும் ஆதார் அட்டையில் பிறந்த தேதி மாற்ற வேண்டுமென்றால் இ-சேவை மையங்களில் மாற்ற முடியாது. தபால் நிலையங்களில் மட்டுமே மாற்ற முடியும். அதுவும் குறிப்பிட்ட நேரத்தில் மட்டும்தான் செல்ல முடியும். இதையும் பொதுமக்களுக்கு கூற வேண்டும். நான் எனது தாயாருக்கு பிறந்த தேதி மாற்றுவதற்கு பல இடங்களில் தேடிவிட்டு பின்னர் தபால் நிலையத்தில் மாற்றினேன். தற்போது தென்காசி மாவட்டத்தில் உள்ள ஆதார் மையங்கள் போதுமானவை தான். ஆனால் இதுகுறித்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்த வேண்டும்.

பல்வேறு பிரச்சினைகள்

இதுதொடர்பாக நெல்லை அதிகாரிகள் கூறுகையில், 'ஆதார் என்பது மத்திய அரசு கொடுக்கின்ற ஒரு அடையாள அட்டை தான். ஆனால் இதை எல்லோரும் அனைத்து பணப்பயன்களுக்கும் பயன்படுத்துகிறார்கள். பிறப்பு- இறப்பு சான்று கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் பரிந்துரையின் பேரில் உதவி கலெக்டர் மூலம் பெற்றுக் கொள்ளலாம். ஆனால் அந்த பிறப்பு சான்றிதழ் கூட ஆதாரில் உள்ள தேதியும், பிறப்பு சான்றிதழ் தேதியும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். ஆதாரில் திருத்தம் செய்ய கடந்த ஜனவரி மாதம் 26-ந் தேதிக்கு பிறகு புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் ஆதார் மையங்களில் திருத்தம் செய்வதற்கு காலதாமதம் ஆகிறது. ஆதார் திருத்தம் செய்வதற்கு வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் தனியாக ஒரு கவுண்ட்டர் செயல்பட்டு வருகிறது. இதை மக்கள் அதிக அளவில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இ-சேவை மையங்களில் பணியாற்ற கூடியவர்கள் தனியார் நபர்கள் தான். அவர்கள் பணியில் இருந்து நின்று விட்டால் அவர்களுக்கு கொடுக்கப்படுகின்ற அடையாள எண் மாற்ற ஆறு மாதம் ஆகிறது. இதனால் தான் சில இ-சேவை மையங்களில் பதிவு சரியாக செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது. அதுவும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தான் செய்ய முடியும். இப்படி பல பிரச்சினைகள் உள்ளது' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்