களக்காடு அருகே பச்சையாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைக்கப்படுமா?

களக்காடு அருகே பச்சையாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Update: 2023-09-01 20:22 GMT

களக்காடு:

களக்காடு அருகே உள்ள காமராஜ்நகர்-மஞ்சுவிளை இடையே ஓடும் பச்சையாற்றின் மீது கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு நடைபாலம் அமைக்கப்பட்டது. இந்த பாலம் மிகவும் குறுகியதாகவும், பழுதடைந்த நிலையிலும் காட்சி அளிக்கிறது. பாலத்தின் தடுப்பு கம்பிகள் சேதமடைந்து இருக்கிறது. அபாயகரமாக உள்ள இந்த பாலத்தின் வழியாகத்தான் கிராம மக்கள் தினமும் சென்று வருகின்றனர்.

இந்த கிராமத்தை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் மஞ்சுவிளை, களக்காடு, நெல்லை மற்றும் வெளியூர்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் கல்வி பயின்று வருகின்றனர். அவர்களும் கரணம் தப்பினால் மரணம் என்பது போல இந்த பாலத்தின் வழியாகவே சென்று வருகிறார்கள்.

20 அடி உயரத்தில் பாலம் உள்ளதால் சிறுவர்கள் ஆற்றில் தவறி விழுந்து விடக்கூடாது என்பதற்காக அவர்களின் பாதுகாப்பு கருதி பெற்றோர்களும் உடன் செல்ல வேண்டியுள்ளது. பாலம் குறுகியதாக இருப்பதால் ஆட்டோ, கார், வேன்கள், பள்ளி பஸ்கள் என்று எந்த வாகனமும் செல்ல முடியாத நிலை உள்ளது.

எனவே பொதுமக்கள் நலன் கருதி, மஞ்சுவிளை-காமராஜ்நகர் இடையே பச்சையாற்றின் குறுக்கே உள்ள பழுதடைந்த நடைபாலத்தை அகற்றி விட்டு புதிதாக அகலத்துடன் கூடிய உயர்மட்ட பாலம் அமைத்து தரப்படுமா? என்று அந்த பகுதி பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்