திருக்கோகர்ணம் ரெயில்வே கேட்டில் மேம்பாலம் அமைக்கப்படுமா?

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ரெயில்வே கேட்டில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-01-23 18:30 GMT

ரெயில்வே கேட்

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் பாலன் நகரில் ரெயில்வே கேட் அமைந்துள்ளது. இதனை கருவேப்பிலான் ரெயில்வே கேட் என அப்பகுதி மக்கள் அழைக்கின்றனர். புதுக்கோட்டை- திருச்சி மார்க்க ரெயில் பாதையில் இந்த கேட் அமைந்து உள்ளது. திருச்சி-புதுக்கோட்டை நெடுஞ்சாலை இந்த கேட் வழியாகத்தான் கடந்து செல்கிறது. புதுக்கோட்டை நகருக்குள் நுழையும் பகுதியில் இந்த கேட் காணப்படுகிறது.

ரெயில் வருகிற நேரங்களில் இந்த கேட் மூடப்படும். அப்போது சாலையின் இருபுறமும் வாகனங்கள் வரிசையாக அணிவகுத்து நிற்கும். திருவப்பூர் ரெயில்வே கேட் போன்றது தான் இதன் நிலைமை. அங்கு காணப்படும் போக்குவரத்து நெரிசலும் இதிலும் இருக்கும். திருக்கோகர்ணம் வழியாக செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாகும். குறிப்பாக பஸ்கள், இருசக்கர வாகனங்கள், கார்கள் அதிகளவில் இயக்கப்படுகின்றன. மேலும் ஆம்புலன்சுகளும் இந்த பாதையில் அதிகளவில் செல்லும்.

இந்த நிலையில் ரெயில் வருகிற நேரத்தில் திருக்கோகர்ணம் ரெயில்வே கேட் மூடப்படும் போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க மேம்பாலம் அமைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

மேம்பாலம் அமைக்கப்படுமா?

அப்துல் ஜாபர்:- மக்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரித்தப்படியே உள்ளது. அதுபோல் தான் வாகனங்களின் பயன்பாடும் அதிகரிக்கிறது. புதுக்கோட்டை நகரின் வளர்ச்சிக்கு பல்வேறு நடவடிக்கைகள் தேவைப்படுகிறது. அந்த வகையில் திருக்கோகர்ணத்தில் உள்ள ரெயில்வே கேட்டில் மேம்பாலம் அமைக்கப்பட வேண்டியது அவசியமாகும். தற்போது போக்குவரத்து அதிகமாக இந்த வழித்தடத்தில் உள்ளது. இதில் மேம்பாலம் அமைத்தால் ரெயில்வே கேட் மூடப்படும் நேரத்தில் போக்குவரத்து நெரிசல் தவிர்க்கப்படும். மேலும் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் சிரமம் இல்லாமல் பயணிக்க முடியும்.

தேர்தல் வாக்குறுதி

விடுதலை குமரன்:- திருக்கோகர்ணத்தில் உள்ள ரெயில்வே கேட்டில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கடந்த 30 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறார்கள். தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சியினர் திருவப்பூர், திருக்கோகர்ணம் ரெயில்வே கேட்டில் மேம்பாலம் அமைக்கப்படும் என வாக்குறுதி அளிப்பார்கள். அதன்பின் அறிவிப்போடு நின்றுவிடும். வருகிற காலங்களிலாவது இந்த இடத்தில் ரெயில்வே மேம்பாலம் அமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ரெயில்வே கேட்டில் வாகனங்கள் காத்திருக்கும் 10 நிமிடங்களில் இருபுறமும் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்பதை காணமுடியும். எனவே மக்களின் நலன் கருதி இந்த பணியை மேற்கொள்ள வேண்டும்.

நோயாளிகள் அவதி

சீனிவாசன்:- புதுக்கோட்டையில் இருந்து நகருக்கு வெளியேயும், நகரின் வெளிப்பகுதியில் திருச்சி மார்க்கத்தில் இருந்து புதுக்கோட்டை நகருக்குள்ளும் இந்த வழியாக ஆம்புலன்சுகள் அதிகம் செல்வது உண்டு. இதில் ரெயில் வருகிற நேரத்தில் கேட் மூடப்படும் போது ஆம்புலன்சுகள், வாகனங்களோடு வரிசையில் நிற்கும். அதனால் நோயாளிகளை குறிப்பிட்ட நேரத்திற்குள் மருத்துவமனைக்கு கொண்டு செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே இந்த வழித்தடத்தின் முக்கியத்துவம் கருதி மேம்பாலம் அமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே இப்பகுதியில் மேம்பாலம் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதன்பின் அதுபற்றி எதுவும் அறிவிப்பு இல்லை. திருவப்பூர் ரெயில்வே கேட் போல் இந்த கேட்டிற்கும் முக்கியத்துவம் கொடுத்து மேம்பாலம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். திருவப்பூர் ரெயில்வே கேட்டில் மேம்பாலம் அமைக்கப்பட உள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. நீண்ட கால கோரிக்கை தற்போது தான் நிறைவேறப்போகிறது. இதுபோல் இப்பகுதியில் மேம்பாலம் அமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

போக்குவரத்து நெரிசல்

பாலாஜி:- புதுக்கோட்டை மார்க்கமாக தற்போது ரெயில் போக்குவரத்து அதிகரித்துள்ளது. தினமும் 20 முதல் 25 ரெயில்கள் திருக்கோகர்ணம் பாலன்நகர் ரெயில்வே கேட்டை கடந்து செல்கின்றன. இதில் கேட் மூடப்படும் போது நிற்கும் சில நிமிடங்களில் சாலையில் இரு புறங்களிலும் வாகனங்கள் வரிசையாக அணிவகுத்து நிற்கும். இதேபோல் ரெயில் கடந்து சென்ற பின் கேட் திறக்கப்படும் போது இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் ஒருவருக்கொருவர் முந்தி செல்வது உண்டு. அதேநேரத்தில் பஸ்கள், கார்கள், லாரிகள் உள்பட கனரக வாகனங்களும் செல்லும். இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த இடத்தில் மேம்பாலம் அமைத்தால் போக்குவரத்திற்கு பயனுள்ளதாக இருக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்