குட்டியுடன் காட்டு யானைகள் அட்டகாசம்

பேரணாம்பட்டு அருகே குட்டியுடன் வந்த காட்டு யானைகள் விவசாய பயிர்களை சேதப்படுத்தின.

Update: 2023-09-10 14:24 GMT

காட்டு யானைகள் அட்டகாசம்

பேரணாம்பட்டு வனச்சரக பகுதியில் சேராங்கல், மோர்தானா, நாய்க்கனேரி, குண்டலப்பல்லி காப்புக்காடு பகுதிகளில் சுற்றித் திரிந்து வரும் ஒற்றை யானை மற்றும் ஒரு குட்டி யானையுடன் சுற்றித்திரியும் காட்டு யானைகள் கூட்டம் கடந்த சில மாதங்களாக சேராங்கல், எருக்கம்பட்டு, பத்தலப்பல்லி, குண்டலப்பல்லி வனப்பகுதியையொட்டி அமைந்துள்ள விவசாய நிலங்களில் புகுந்து மா, தென்னை, வாழை தோட்டங்களை சூறையாடி வருகின்றன.

இந்தநிலையில் ஆந்திர மாநிலம் நெல்லிபட்லா வனப்பகுதியில் இருந்து குட்டி யானையுடன் 5 பெரிய யானைகள் தமிழக வன எல்லையான மோர்தானா காப்புக் காட்டிற்குள் நுழைந்தன. இந்த காட்டு யானைகள் நேற்று முன்தினம் நள்ளிரவு பேரணாம்பட்டு அருகே உள்ள முத்துக்கூர் கிராமத்தை சேர்ந்த பார்த்திபன் என்பவருக்கு சொந்தமான வாழைத்தோப்பிற்குள் புகுந்து அறுவடைக்கு தயாராக இருந்த 150-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள், 60 தென்னங்கன்றுகள், அறுவடைக்கு தயாராக இருந்த சோளம், கத்தரிக்காய் ஆகியனவற்றை சேதப்படுத்தின.

விரட்டியடிப்பு

நள்ளிரவு 12 மணியளவில் தொடங்கிய யானைகளின் அட்டகாசம் நேற்று காலை 6 மணி வரை நீடித்தது. விவசாயிகள் பட்டாசு வெடித்து அருகிலுள்ள வனப்பகுதிக்குள் விரட்டினர்.

தகவலறிந்த பேரணாம்பட்டு வனத்துறையினர் நேரில் சென்று விசாரணை நடத்தினர். குண்டலப்பல்லி, முத்துக்கூர் பகுதியில் ஒரு பக்கம் ஒற்றை யானையின் அட்டகாசத்தை சமாளிக்க முடியாத நிலையில் தற்போது மற்றொரு பக்கம் குட்டி யானையுடன் காட்டு யானை கூட்டம் விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சூறையாடி வருவதால் தங்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி வருவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்