ஊருக்குள் ஒய்யாரமாக நடந்து சென்ற காட்டு யானைகள்
துடியலூர் அருகே ஊருக்குள் புகுந்த காட்டு யானைகள் ஒய்யாரமாக நடந்து சென்ற காட்சி சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரலாகி வருகிறது.;
தடாகம்
கோவை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் காட்டு யானைகள், கரடி, சிறுத்தை, காட்டெருமை, காட்டுப்பன்றி உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்த வனவிலங்குகள்தண்ணீர், உணவுத்தேடி அவ்வப்போது குடியிருப்பு, விளைநிலங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.
இந்த நிலையில் வனப்பகுதியில் வறட்சியின் காரணமாக கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள மாங்கரை, தடாகம் உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் தடாகத்தை அடுத்த மூலக்காடு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 3 காட்டு யானைகள் நஞ்சுண்டாபுரம் பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்தன. இதுகுறித்து அறிந்து அங்கு வந்த வனத்துறையினர் காட்டு யானைகளை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து அந்த பகுதியிலேயே சுற்றி வந்த காட்டு யானைகள் நேற்று முன்தினம் காலை 6 மணியளவில் நஞ்சுண்டாபுரம் கிராமத்திற்குள் நுழைந்தன. அப்போது காட்டு யானைகள் ஏதோ வாக்கிங் வந்ததுபோல, தெருக்களில் ஒய்யாரமாக நடந்து சென்றன. இதனை அந்த பகுதியில் வசிப்பவர்கள் தங்களது வீடுகளில் இருந்தபடியே வீடியோ எடுத்தனர். அப்போது காலையில் வெளியே சென்றவர்கள் தெருக்களில் உலா வந்த காட்டு யானைகளை பார்த்து அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். தொடர்ந்து காட்டு யானைகள் வனப்பகுதிக்குள் சென்றன. தற்போது இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
கிராமத்திற்குள் திடீரென காட்டு யானைகள் நுழைந்ததால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் புகுவதை தடுக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.