கடையநல்லூர் அருகே காட்டு யானைகள் அட்டகாசம்

கடையநல்லூர் அருகே, தோட்டங்களில் காட்டு யானைகள் புகுந்து தென்னை மரங்கள் சாய்த்து அட்டகாசம் செய்தன

Update: 2022-05-26 14:52 GMT

அச்சன்புதூர:

கடையநல்லூர் அருகே, தோட்டங்களில் காட்டு யானைகள் புகுந்து தென்னை மரங்கள் சாய்த்து அட்டகாசம் செய்தன.

காட்டு யானைகள்

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் மேக்கரை பீட், வடகரை, வெள்ளக்கல்தேறி, அச்சன்புதூர் போன்ற பகுதிகள் உள்ளன.

இங்குள்ள தோட்டங்களில் விவசாயிகள் வாழை, தென்ைன, மா போன்றவை பயிரிட்டு வளர்த்து வருகிறார்கள். இந்த தோட்டங்களில் அவ்வப்போது காட்டு யானைகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.

தென்னை மரங்கள் நாசம்

இந்தநிலையில் நேற்று முன்தினம் வெள்ளக்கல்தேறி பகுதியில் உள்ள தோட்டங்களில் குட்டிகளுடன் யானைகள் புகுந்தன. அங்குள்ள தென்னை மரங்களை பிடுங்கி வீசி நாசப்படுத்தின. இவ்வாறு அடுத்தடுத்து உள்ள தோட்டங்களிலும் புகுந்து நாசம் செய்தன. நேற்று தோட்டங்களுக்கு வந்த விவசாயிகள் தென்னை மரங்கள் சாய்ந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். இதன்பேரில் சம்பவ இடத்துக்கு மேக்கரை பீட் வனவர் அம்பலவாணன் தலைமையில் வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் விவசாயிகள் சென்று பார்வையிட்டனர். பின்னர் அங்கேயே முகாமிட்டு யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தென்னை மரங்களை யானைகள் பிடுங்கி வீசி சாய்த்ததை அறிந்த விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்